» சினிமா » திரை விமர்சனம்

விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா - திரை விமர்சனம்

வெள்ளி 12, ஜூலை 2024 12:36:00 PM (IST)

கதை நாயகன் மகாராஜா விஜய் சேதுபதி தன் வீட்டில் வைத்திருந்த லட்சுமி காணாமல் போனதாகப் புகார் அளிக்கிறார். லட்சுமி என்றால் செல்வம்.. அப்படி எந்த செல்வத்தைத் தொலைத்தாய் என காவல் அதிகாரிகளிலிருந்து கைதாகியிருக்கும் திருடன் வரை அனைவரும் கேட்கிறார்கள். மகாராஜா தான் தொலைத்த அந்தப் பொருளைப் பற்றிச் சொல்கிறார்.

அதைக்கேட்டு மொத்த காவல்நிலையமுமே கோபமடைகிறது. மகாராஜாவை அடித்துவிரட்டுகிறார்கள். ஒருகட்டத்தில், காவல் ஆய்வாளரிடம் என் பொருளைக் கண்டுபிடித்துக்கொடுத்தால் ரூ.5 லட்சம் தருவதாகக் கூறுகிறார். ஐநூறு ரூபாய் விலைகூட இல்லாத திருடுபோன பொருளை இவ்வளவு தொகை கொடுத்து மீட்க இவன் ஏன் போராடுகிறான் என காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். திருடுபோன பொருளுக்குள் வேறு ஏதோ இருக்கிறது என காவல்துறை அப்பொருளை மீட்க தீவிரம் காட்டுகின்றனர்.

திருடுபோன லட்சுமி என்ன? சாதாரண பொருளுக்காக ஏன் மகாராஜா இவ்வளவு மெனக்கெட வேண்டும்? என முதல்பாதி வரை நகைச்சுவைக் காட்சிகளுக்கு கைதட்டி, ‘சீப்பைக் காணோம்ங்கறது மாதிரி இருக்கே..’ என நினைத்தால் இரண்டாம் பாதி துவக்கத்திலிருந்து பார்வையாளர்களின் முதுகு நேராகி நிமிடத்திற்கு நிமிடம் பரப்பு கூடி திரையரங்கம் அமைதியாகிறது.

முதல்பாதி முழுக்க காவல்நிலையத்தில் நாயகன் சந்திக்கும் உதாசீனங்களும், நக்கல்களும் நம்மைச் சிரிக்க வைத்தாலும் உண்மையில் மகாராஜா எதற்காக அங்கு சென்றார் என திரைக்கதை முடிச்சுகள் அவிழும்போது ஒரு திரையனுபமே கிடைக்கிறது. நான் லீனியர் கதையாகவே செல்லும் திரைக்கதையில் நாம் ஒன்று யோசிக்க, இயக்குநரின் புத்திசாலித்தனமான திரைக்கதை அவற்றை உடைக்கின்றன.

பார்வையாளர்களின் கண்டுபிடிப்புகளை அடுத்தடுத்த காட்சிகளில், ‘இது இல்லப்பா அது’ என திணறடித்திருக்கிறார் நித்திலன். பெரும்பாலும் நம் வாழ்வை தற்செயல் நிகழ்வுகளே முடிவு செய்கின்றன. அப்படி, ஒரு தற்செயலான கருவை எடுத்துக்கொண்டு, தன் வினை தன்னைச் சுடுவதை உணர்வுப்பூர்வமான சினிமாவாக எடுத்திருக்கிறார்.
அரியணை ஏறினாரா விஜய் சேதுபதி? மகாராஜா - திரை விமர்சனம்
தக் லைஃப் படப்பிடிப்பில் விபத்து.. நடிகர் ஜோஜூ ஜார்ஜ்க்கு எலும்பு முறிவு!

இன்றைய கமர்சியல் இயக்குநர்கள் கதையே இல்லையென்றாலும் திரைப்படங்களை எடுத்து, ‘இங்க ஹீரோதான் பிரச்னை’ என புலம்பித் தள்ளுகிறார்கள். கதையும், திரைக்கதையும்தான் படத்தின் தோல்விக்குக் காரணம் என்பதை அவ்வளவு எளிதாக ஒப்புக்கொள்ளவும் மாட்டார்கள். நித்திலன் எதைச் சொல்ல நினைத்தாரோ அதை கச்சிதமாக திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார். மகாராஜா வைத்திருக்கும் சவரக்கத்தியிலிருந்து தொலைந்துபோன லட்சுமி வரை உயிரற்ற பொருள்கள் நம் வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என சின்னச் சின்ன இடங்களிலும் பெரிய கதைகளைச் சொல்கிறார். ஒரு இயக்குநரின் கதையை அவ்வளவு திறம்படக் கையாண்டிருக்கிறார் எடிட்டர் பிலோமின் ராஜ்.

பொதுவாக சினிமாவில் ஒரு கணக்குண்டு. இயக்குநரோ நடிகரோ சினிமாவில் பத்து ஆண்டுகள் மட்டுமே வெளிச்சத்தில் இருக்க முடியும். அதன்பின், அதிர்ஷ்டத்துக்குப் பின்பே திறமை வைக்கப்படும். ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும் நல்ல திரைப்படங்களைக் கொடுத்த கலைஞர்களும் மெல்ல மெல்ல வெள்ளித்திரையிலிருந்து தூக்கி எறியப்பட்ட கதைகள் உண்டு. அப்படி, பல நல்ல திரைப்படங்களில் நடித்தாலும் 96 படத்திற்குப் பின் கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கு வெற்றிப்படம் என எதுவும் அமையவில்லை. மகாராஜா அவரின் 50-வது திரைப்படம். இதுவரை அவர் நடித்ததிலேயே இதுவே சிறந்த திரைப்படம் எனத் தோன்றுகிறது. காதில் வெட்டுக்காயத்துடன் நரைதாடியுடன் பழிவாங்கத் துடிக்கும் வெறியை தன் பக்குவமான நடிப்பால் கடத்தி கைதட்டல் பெறுகிறார்.

சமகாலத்தில் பாலிவுட்டின் போக்கை மாற்றிய இயக்குநர்களில் முக்கியமானவரான அனுராக் காஷ்யப் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இயக்குநர் சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தைப் பார்த்து பரவசப்பட்டவர் ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ படத்தை எடுக்கிறார். அவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் மனித குணங்களைப் பற்றி சமரசமின்றி பேசிய படம் அதுவே. காமத்தையும் வன்முறையும் நேர்கொட்டில் கொண்டு சென்று வெற்றி பெற்றவர். இப்படத்தில் அவர் மிக எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து படத்தின் வெற்றிக்கு பங்களித்திருக்கிறார். அவர் முகத்தோற்றமே வில்லனுக்கானது என்பதால் இனி கோலிவுட்டில் வலம் வருவார்.

ஆனால், இப்படத்தில் அனுராக்கின் வாயசைவுகளும், டப்பிங்கும் சில இடங்களில் சரியாக இல்லை. இயக்குநர் கவனித்திருக்கலாம். நடிகர்கள் நட்ராஜ் (நட்டி), முனிஷ்காந்த், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்டோரின் கதாபாத்திர அறிமுகங்களும் அதை படம் முழுக்க வளர்த்துக் கொண்டு சென்ற விதமும் மிகச்சிறப்பு. நகைச்சுவைக்காக மட்டுமே நாம் ரசித்த சிங்கம் புலி மகாராஜாவில் வேறு பரிணாமத்தை எடுத்திருக்கிறார். சிரித்துக்கொண்டே அவர் சொல்லும் வார்த்தைகள் திரையரங்கை அமைதிபடுத்துகிறது. விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஜனா நெமிதாஸ் நல்ல தேர்வு.

சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசுக்கு பாராட்டுகளைப் பெற்றுத்தரும் திரைப்படமாக மகாராஜா இருக்கும். இடைவேளை சண்டைக்காட்சிகளில் பின்னணி இசையுடன் சண்டைக்காட்சியைப் பார்க்கும்போது நமக்கே வன்முறைகள் மேலோங்குகிறது. எதார்த்தமான சண்டைகளாக இருந்தாலும் ஆயுதத்தால் அவை பலம் பெருகின்றன.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், எடிட்டர் பிலோமின் ராஜ் என் ஒட்டுமொத்த படக்குழுவும் தரமான வேலைகளைச் செய்திருக்கின்றனர். குரங்கு பொம்மை படத்திற்குப் பின், நித்திலன் 7 ஆண்டுகள் கழித்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த இடைவெளியின் உழைப்பு எழுத்தில் தெரிகிறது. மகாராஜா திரைப்படத்தின் திரைக்கதை பேசப்படும். குடும்பத்துடன் சென்று பார்க்கும் படமாகவும் மறுமுறை பார்க்கும் அளவிற்கு, தன் சலூன் கடை நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் இந்த மகாராஜா!


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory