» சினிமா » செய்திகள்
மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது
திங்கள் 30, செப்டம்பர் 2024 12:43:31 PM (IST)
பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு (74) இந்திய சினிமாவின் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. மிர்கயா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திற்கே சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். தொடர்ந்து பாலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்தார். குறிப்பாக இவரின் ‛டிஸ்கோ டான்சர்' படம் ஹிந்தி சினிமாவை தாண்டி இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பிரபலமானது. குறிப்பாக அந்த படத்தில் வரும் ‛ஐ யம் ஏ டிஸ்கோ டான்சர்' பாடல் இந்திய அளவில் பிரபலமானது.
தி நக்சலைட்டிஸ், கவாப், கஸ்தூரி, சித்தாரா, ஹிம்மத்வாலா, அக்னிபாத் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்துள்ளார். நிறைய டிவி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். பெங்காலி மொழி படங்களிலும் நடித்துள்ளார். 1989ம் ஆண்டில் 19 படங்களில் நடித்தமைக்காக லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.
மூன்று முறை தேசிய விருது, பிலிம் பேர் விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். இந்தாண்டு பத்ம பூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலிலும் உள்ள இவர் தற்போது பா.ஜ., கட்சியில் உள்ளார். முன்னாள் ராஜ்யசபா எம்பி.,யாகவும் இருந்துள்ளார். சினிமாவில் இவரது கலைச் சேவையை பாராட்டி மத்திய அரசு இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான 'தாதா சாகேப் பால்கே' விருதை அறிவித்துள்ளது. தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு பாலிவுட் திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.