திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (2 of 53)
தாமிரபரணி, இந்தியாவில் உள்ள சிறப்பான நதிகளில் இதுவும் ஒன்று. பொதிகை மலை உச்சியில் தொடங்கி வங்க கடலில் வாசம் செய்யும் இந்த நதியைப் பற்றி பல சுவாரஸ்யமான கதைகள் உண்டு.
தாமிரபரணி நதியைப் பற்றி கூறும் போது அதன் வெவ்வேறு பெயர்களைப் பற்றி நிச்சயம் சொல்ல வேண்டும். அதே நேரம் தாமிரபரணி என்னும் பெயர் எப்படி வந்து இருக்கும் எனவும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். வால்மீகி ராமாயணத்திலும், வியாசர் பாரதத்திலும் காளிதாசனின் இரகுவம்சத்திலும் தாமிரபரணி பற்றி "தாம்பிரபரணி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாமிரபருணி எனவும் இதை கூறி இருக்கிறார்கள். இந்த பெயர் எல்லாம் மருவி தான் இப்போது தாமிரபரணி என்று அழைக்கப்படுகிறது.
வாரகமிகிரர் என்பவர் 505-587-ம் ஆண்டுகளில் வாழ்ந்தவர். இவர் கூட தாமிரபரணி பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். ஆக பழம்பெரும் நதி தாமிரபரணி . தாமிரபரணி - தாமிரபரணி என்றால் தாமிரம்+பரணி . தாமிரம் என்றால் செம்பு. அதாவது தாமிரம் கலந்த பரணி நதி தாமிரபரணி நதியானது. தாமிரசத்து நோய் தீர்க்கும் அரிய மருந்து. இந்த ஆற்றின் கரையில் தாமிரசத்து நிறைந்து காணப்படுகிறது. ஆகவே தாமிரபரணியில் குளித்தால் நோய் தீர்ந்து அற்புதம் மலர்கிறது. தாமிரம் நிறைந்த ஆறு தாமிரபரணி என அழைக்கப்படுகிறது என நெல்லை மாவட்ட மக்கள் பெயர் வந்த காரணத்தை பேசுகிறார்கள்.
ஆனால் கலை களஞ்சியம் என்றும் நுhலின் 5-வது பகுதியில் தாமிரபரணி பெயர் வந்த கதையை வேறு மாதிரி கூறுகிறார் ஆசிரியர். இலங்கை தீவிற்கு "தாப்ரபன்னெ” என்றும் "தாம்பபன்னி” என்றும் பெயர்கள் இருந்திருக்கிறது. இலங்கை தீவிலிருந்து மலை தோட்டங்களில் வேலை செய்ய வேண்டி வந்து குடியேறிய மக்கள் நதிக்கு தீவு பெயரால் "தாம்ப பன்னி” என்று அழைத்தார்கள். அதுவே இப்பொழுது தாமிரபரணி என்று அழைக்கப்படுகிறது.
இலங்கையில் இருந்து தோட்ட வேலைக்கு வந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. வெள்ளையர் காலங்களில் தோட்ட வேலை செய்ய வெள்ளையத்துரைகளே இலங்கை சென்று தோட்ட வேலைகளுக்கு தேவையான ஆட்களை அழைத்து வந்தார்கள. இதற்கு கடந்த 1994 ஆம் ஆண்டு காரையாரில் வாழ்ந்த அன்னம்மாள் என்னும் 98 வயது பாட்டியின் குடும்பமே சாட்சி. இந்த அன்னம்மாள் பாட்டி மஞ்சள் காமாலை நோய்க்கு அந்த சமயத்தில் மருந்து கொடுத்து கொண்டிருந்தார். மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்த பிரசித்தி பெற்ற அன்னம்மாள் பாட்டி தற்போது உயிரோடு இல்லை.
பொருநை- இந்த தாமிரபரணிக்கு பொருநை நதி என்றும் மற்றுமொரு பெயரும் உண்டு. இந்த பெயர் எப்படி வந்தது என்று ஆராய்ந்த போது, தமிழ் நுhல்களில் பிற்காலங்களில் இந்த ஆற்றை தண் பொருநை என்று அழைத்தது தெரியவருகிறது. அதே நேரம் சிலப்பதிகாரத்தில் காவிரியை தண்பொருநை என்று குறிப்பிடுகிறார்கள். இருந்தாலும் தன்பொருநை என்று அதிக நுhல்கள் தாமிரபரணியை தான் குறிப்பிடுகிறது. நம்மாழ்வார் தாமிரபரணியை பொருநல் என்று குறிப்பிடுகிறார். அதாவது பொருந்தம் என்னும் பெயரே பிற்காலங்களில் பொருநை என்று அழைக்கப்படுகிறது.
அதாவது பொருந்தம் என்றால் பொருந்துதல் என்னும் பொருள்படுகிறது. முதல் ராஜராஜனுடைய 28 ஆம் கல்வெட்டுகள் 1013 வருடம் வெட்டப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுக்கள் காணுமிடமான சீவலப்பேரியை அடுத்த சிற்றாறு (சித்திரா நதி) கலக்கும் பகுதியில் தாமிரபரணி நதியை தன் பொருந்தம் என்று குறிப்பிட்டுள்ளனர். பெரிய புராணத்தில் பாண்டிய நாட்டை குறிப்பிடும் போது சேக்கிழார் தாமிரபரணி ஆற்றை மனதில் கொண்டு "தண் பொருந்தப் புனல் நாடு” என்று தான் குறிப்பிடுகிறார்.
ஆகவே தாமிரபரணி தமிழ் நூல்களில் பொருநை, பொருநல, தண் பொருநை, தண் பொருந்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாமிரபரணி செங்குத்தான பொதிகை மலையில் நீர்வீழ்ச்சியாக விழுகிறது. இதை பாணதீர்த்தம் என்று அழைக்கிறோம்