திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (3 of 53)
பாணதீர்த்தத்தில் கீழே உள்ள பாபநாசம் மேலணையில் சேரும் ஆறுகள் பாம்பாறு, காரியாறு என்னும் சிற்றாறுகள் ஆகும். பாணதீர்த்தத்திற்கு மேலேயே பேயாறு, உள்ளாறு என்னும் இரு சிற்றாறுகள் சேர்ந்து விடுகின்றன.
பொதிகை என்னும் அகத்திய மலையில் உருவாகும் தாமிரபரணி ஆறு சுமார் 75 மைல் தொலைவு ஓடி சுமார் 1750 சதுர மைல் பகுதிகள் செழிப்பாக்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அடுத்தடுத்து பல குன்றுகளை கடந்து வரும் இந்த ஆற்றில் உள்ள நீர்வீழ்ச்சிகள் மிகவும் அற்புதமாக கருதப்படுகிறது. அதன்பின் முண்டன்துறைக்கு தாமிரபரணி முன்பே சேர்வலாறு அத்துடன் சேருகிறது.
அதன் பின் தாமிரபரணி இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி பாபநாசம் மலை குன்றுகளை கடந்து 300 அடி நீர்வீழ்ச்சியாக கல்யாணதீர்த்தம் என்ற பெயருடன் பாய்கிறது. மற்றொன்று லோயர்கேம்ப் அருகே வந்து மின்சாரம் தயாரிக்கப் பயன்பட்ட பிறகு அகத்தியர் அருவிக்கு பின்னால் மீண்டும் தாமிரபரணியில் சேருகிறது.
மணிமுத்தாறு அணை பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணை. பாபநாசம் அணைக்கு சமமான பலத்துடன் கட்டப்பட்டது. தாமிரபரணியின் துணை நதியான கடனாநதி, ராமநதி, கருப்பநதி, குண்டாறு, ஆகியவற்றில் குறுக்கே அணைகள் கட்டப்பட்டுள்ளன.