திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (7 of 53)
பச்சை பட்டினை விரித்தாற் போல் இருக்கும் அடர்ந்த காடுகளில் வெள்ளியை உருக்கி விட்டதை போல தெரியும் இடம் தான் பாணதீர்த்தம். இந்த பாணதீர்த்தம் செல்ல வேண்டுமானால் பாபநாசம் மேலணையில் இருந்து படகில் செல்ல வேண்டும். இங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இதமான அருவி உள்ளது. அதை பாணதீர்த்த அருவி என்று சொன்னார்கள். குளிக்கும் போதே மனதில் நம்மை அறியாமலேயே ஒரு உற்சாகம் பிறக்கிறது.
சித்தி புத்தி விநாயகர்
பெரும்பாலும் தாயை போல மணப்பெண் வேண்டுமென்று பிள்ளையார் குளத்துக்கரை, ஆற்றங்கரையில் குடி கொண்டிருக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றன. அதனால் தாமிரபரணியில் பிள்ளையார் பல இடத்தில் ஆலமரத்தடியில் காத்தி ருக்கிறார். என்பது மக்களின் கருத்து. ஆனால் பிள்ளையார் நதிக்கரையில் இருந்தால் ஒரு மனிதன் தன் உடலை சுத்தப்படுத்திய பின்னர் மனதை சுத்தப்படுத்த விநாயரை தரிசிக்கவே இவர் கரையில் அமர்ந்துள்ளார் என்பதுதான் உண்மை.
தாமிரபரணி கரையில் விநாயகர் எல்லா பகுதியிலும் தனியாகத்தான் உள்ளார். ஆனால் பாணதீர்த்தம் அருகில் பிள்ளையார் சித்தி புத்தி என்ற இரு மனைவிகளுடன் சித்தி புத்தி விநாயகர் என்ற பெயரில் மிக அற்புதமாக உள்ளார். வடநாட்டில் பிள்ளையாருக்கு 2 மனைவிகளும், நமது தமிழ் கடவுள் முருகனோ பிரம்மச்சாரி ஆண்டியாகவும் மக்கள் வணங்கி வருகின்றனர். தென் நாட்டை பொறுத்தவரை முருகன் வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்க விநாயக பெருமான. பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாக நாம் வணங்கி வருகிறோம்.
ஆகவே இந்த சித்தி புத்தி விநாயகர் நமது பகுதிக்கு வித்தியாசமாக உள்ளது. இருந்தாலும் கூட இக்கோவிலை இந்த பகுதியில் வணங்கி வருகின்றனர்.இவரை பெரும்பாலுமே படகோட்டிகள்தான் வணங்குகிறார்கள். அவர்கள் இவரை தரிசனம் செய்து தான் தங்கள் வாழ்க்கையை தொடங்குகின்றனர். அணைக்குள் இருந்த இந்த பிள்ளையார் தற்சமயம் அணைக்கட்டப்பட்ட பிறகு பாணதீர்த்தம் அருகே பிரதிஷடை செய்யப்பட்டுள்ளார். இந்த பக்கம் செல்லும் பயணிகள் பாணதீர்த்தத்தில் குளியல் போட்டு, விநாயகரை வணங்கி விட்டு சந்தோஷமாக படகு ஏறி மீண்டும் பாபநாசம் மேலணைக்கு வந்து ஊருக்கு செல்கின்றனர்.
இந்த பாண தீர்த்தத்தில் இருந்து 5 கி.மீ. மேலே தான் ஒருஅதிசய மரம் உள்ளது. இரவில் இங்கு இலையில் இருந்து சுரக்கும் தண்ணீர் மரத்தின் அடியில் நிற்பவரின் சட்டையை நனைத்து விடுகிறது. இதே போல் மரம் கடனாநதி கரையில் கோரக்க நாதர் ஆலயத்தின் அருகில் உள்ளது. இந்த மரம் மகிசவர்த்தினி மரம் எனப்படுகிறது. இந்த மரத்தில் தண்ணீர் சொட்ட ஒரு விஞ்ஞான காரணமும் உண்டு. இந்த மரம் ஒளிச் சேர்க்கையின் போது நீர் சத்தை எடுத்து கொண்டு இரவு தன் தேவைக்கு மிகுந்த நீரை வெளியேற்றுகிறது என்று கூறுப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னால் அகத்தியர் கோயில் அருகில் உள்ள மா மரத்தில் தண்ணீர் சொட்டு சொட்டாக சொட்டும். பொதிகை மலையில் மரத்தில் சந்தன நீர் கொட்டுவதை கவிஞர் ஒருவர் சினிமா பாடலில் "சந்தன பொதிகையில் தென்றல் என்னும் பொண்ணாள் வந்து வந்து மயக்கி விந்தைகள் செய்கிறாள்” என்று பெண்ணை ஒப்பிட்டு பாடியுள்ளார்.
ஜோடி விநாயகர் |
பாண தீர்த்தம் அருகே சித்தி புத்தி வினாயகர் உள்ளார். பெரும்பாலுமே தென்இந்தியாவில் வினாயகர் தனித்துதான் இருப்பார். வடஇந்தியாவில் தான் சித்தி புத்தி வினாயகர் இருப்பார். தென் இந்தியாவில் பாணதீர்த்தில் தான் இந்த வினாயகர் உள்ளார். அவரை அனைவரும் வணங்கி செல்கிறார்கள். |