» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெங்களூருவில் பிரபல உணவகத்தில் குண்டுவெடிப்பு: என்ஐஏ விசாரணை
சனி 2, மார்ச் 2024 8:56:03 AM (IST)

பெங்களூருவில் பிரபலமான ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ, தடயவியல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்துள்ள ஒயிட் பீல்டில் ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற உணவகம் இயங்கி வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் மசாலா தோசை சுவையாக இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிவார்கள். இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் உணவக பணியாளர்கள் ஃபரூக் ஹூசேன் (26), திவிபான்சூ (25) ஆகிய இருவர் உட்பட 7 வாடிக்கையாளர்கள் படுகாயம் அடைந்தனர். அதில் 2 பேர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் என தெரியவந்துள்ளது. காயமடைந்த 9 பேரும் ஒயிட் ஃபீல்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உணவகத்தில் பற்றி எரிந்த தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 10-க்கும் மேற்பட்டோரை மீட்டனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்ததால் அருகிலுள்ள முதலுதவி அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்த தகவல் வெளியான சமயத்தில், சிலிண்டர் வெடித்ததாகவும், மர்ம பொருள் வெடித்ததாகவும் கருதப்பட்டது. ஆரம்பத்தில் போலீஸாரும் அதே கோணத்தில் விசாரணையை தொடங்கினர். ஆனால், உணவகத்தின் உரிமையாளர்களில் ஒருவரான திவ்யா ராகவேந்திர ராவ், "சமையல் செய்யும் பகுதியில் இருந்த சிலிண்டர் எதுவும் வெடிக்கவில்லை.
வாடிக்கையாளர்கள் உணவு உண்ணும் பகுதியிலே குண்டு வெடித்துள்ளது. இதனை சிசிடிவி காட்சி மூலம் உறுதிப்படுத்தியுள்ளோம். மதிய உணவு நேரத்தில், கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தை தேர்வு செய்து, இந்த சதி செயல் நிகழ்த்தப்பட்டுள்ளது” என உறுதியான தகவலை வெளியிட்டார்.
இதையடுத்து, பாஜக பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா, "ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடித்ததை அதன் உரிமையாளர் உறுதிபடுத்தியுள்ளார். இந்த குண்டுவெடிப்புக்கு பெங்களூரு மக்கள் முதல்வர் சித்தராமையாவிடம் இருந்து தெளிவான விளக்கத்தை எதிர்ப்பார்க்கின்றனர்” என எக்ஸ் தளத்தில் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, கர்நாடக போலீஸ் டிஜிபி அலோக் மோகன், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தயானந்த் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து தடயவியல் துறை அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்பு படை அதிகாரிகள் ஆகியோரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் சிதறி கிடந்த வெடிப்பொருள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மேலும், தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்தனர். அங்கு சிதறி கிடந்த தடயங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதனிடையே, டிஜிபி மோகன் அலோக் கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து முதல்கட்டமாக எந்த முடிவுக்கும் நாங்கள் வரவில்லை. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்திவருகிறோம். சிசிடிவி கேமிரா காட்சிகள், வாடிக்கையாளர்கள் விபரங்கள், இந்த பகுதியில் இருந்த செல்போன் எண்கள் போன்றவற்றை சேகரித்துள்ளோம். தடயவியல் முடிவுகள் வந்த பிறகு, மேலும் தகவல்கள் கிடைக்கும்” என்றார்.
முதல்வர் எச்சரிக்கை: இதுகுறித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறுகையில், "இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தை பார்வையிடுமாறு உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வரா, காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் அங்கு ஆய்வு செய்து சில தகவல்களை அளித்துள்ளனர். சிசிடிவி கேமிராவில் வாடிக்கையாளர் ஒருவர் தனது பையை சாப்பிடும் மேஜைக்கு அடியில் விட்டு சென்றது பதிவாகியுள்ளது.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் இது சக்தி வாய்ந்த வெடிகுண்டு இல்லை என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு மங்களூருவில் நடந்த வெடித்த குண்டை போல சக்தி குறைவானது. இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்களை அனுமதிக்க முடியாது. இந்த சதி செயலில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து தண்டிப்போம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏர் இந்தியா என்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 12, ஜூலை 2025 10:17:14 AM (IST)

தேர்தல் ஆணையம் பாஜக நலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வெள்ளி 11, ஜூலை 2025 3:47:41 PM (IST)

75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு!
வெள்ளி 11, ஜூலை 2025 12:44:15 PM (IST)

இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலை ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர் விமர்சனம்!!
வெள்ளி 11, ஜூலை 2025 10:58:09 AM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 3 பேருக்கு தூக்குத்தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 11, ஜூலை 2025 8:23:20 AM (IST)

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வியாழன் 10, ஜூலை 2025 4:51:19 PM (IST)
