» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் : பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல்

வெள்ளி 27, டிசம்பர் 2024 8:57:54 AM (IST)

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் நேற்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.

ஏற்கனவே இருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்து இருந்த மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கிற்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. இதுபற்றி கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் டெல்லியில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரியங்கா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு 9.51 மணிக்கு மன்மோகன் சிங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.

இதுபற்றிய தகவலை எய்ம்ஸ் மருத்துவமனை நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று இரவு 8.05 மணிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை முன்பு திரண்டனர். முன்னதாக டெல்லி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. முக்கிய இடங்களில் துணை ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

பிரதமர் மோடி இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் தனது எக்ஸ் தள பதிவில் விவேகமும் பணிவும் எப்பொழுதும் கண்ணுக்குத் தெரிந்த தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்டதற்காக இந்தியா வருந்துகிறது. நாடாளுமன்றத்தில் அவரது வாதங்கள் நுண்ணறிவு கொண்டவை. நமது பிரதமராக, அவர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கை குறிப்பு

1932-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி பஞ்சாப்பில் பிறந்த மன்மோகன் சிங், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1957-ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார மேற்படிப்பை முடித்தார். பின்னர் இந்தியா திரும்பிய அவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். தொடர்ந்து 1962-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

அதன் பிறகு, மன்மோகன் சிங் 1966-1969 இல் ஐ.நா. சபையில் பணியாற்றினார். பின்னர் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் ஆலோசகராக பணியாற்றினார்.

மத்திய அரசில் தலைமை பொருளாதார ஆலோசகர் (1972-1976), ரிசர்வ் வங்கியின் கவர்னர் (1982-1985) மற்றும் திட்டக் குழுவின் தலைவர் (1985-1987) போன்ற பல முக்கிய பதவிகளை வகித்தார்.

1991-ம் ஆண்டு பிரதமராக பி.வி.நரசிம்ம ராவ் பதவி ஏற்றபோது, அவரது மந்திரி சபையில் மன்மோகன் சிங், நிதி மந்திரியானார். நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்த வேளையில், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அதை சமாளித்தார். கடுமையான எதிர்ப்பையும் மீறி, இந்தியாவின் பொருளாதாரத்தை தாராளமயமாக்கும் பல கட்டமைப்பு சீர்திருத்தங்களை மன்மோகன் சிங் மேற்கொண்டார்.

கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டார். பல்வேறு கட்சிகள் அடங்கிய கூட்டணி அரசை திறம்பட நடத்தி 5 ஆண்டுகளை நிறைவு செய்தார்.

தொடர்ந்து 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் பிரதமராக தொடர்ந்தார். தொடர்ந்து 10 ஆண்டுகள் பிரதமராக அவர் இருந்த காலத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம், வாட் வரி, ஊரக வேலைவாய்ப்பு திட்டம், அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவை நிறைவேறின. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே சீக்கிய பிரதமர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory