» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழ்நாட்டில் ஆளுநர் - அரசு மோதலால் மக்கள் பணிகள் பாதிப்பு : உச்சநீதிமன்றம் கருத்து
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 5:17:49 PM (IST)
தமிழ்நாட்டில் ஆளுநர் - மாநில அரசு மோதலால் மக்கள் பணிகள் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார் என்றும், இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை என்றும், அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்றும் குறிப்பிட்டு சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு முதலில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு , இந்த இவிவகாரம் தீவிர கவலைக்குரியது என தெரிவித்திருந்தது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு மற்றொரு ரிட் மனுவையும் சுப்ரீம்கோர்டில் தாக்கல் செய்தது. அதில், தமிழக பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க ஆளுநர் வலியுறுத்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையில், இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் அல்லது தீர்த்து வைக்கப்படும் என்று சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி பார்திவாலா பெஞ்ச் தெரிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த வாரம் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்போது இவ்வழக்கு இன்று விசாரிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் இன்று காலையில் தமிழக அரசு தரப்பில் இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆளுநருக்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதன்படி தற்போது நடந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, "ஆளுநர் என்பவர் அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்டவர். ஒரு பக்கம் ஆளுநர் பதவியே தேவை இல்லை என்கிற விவாதம் எல்லாம் நடைபெற்று வருகிறது என்பதையும் சுப்ரீம்கோர்ட்டு கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு மாநில அரசு 2-வது முறையாக ஒரு மசோதாவை அனுப்பி வைத்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். ஆளுநரின் செயல்பாடுகளால் தமிழக பல்கலைக் கழகங்களில் பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், "ஆளுநர் - மாநில அரசு இடையேயான மோதலால் மக்களுக்குதான் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர், அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, அரசியல் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.
மசோதாக்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்துவிட்ட பின்னர் என்ன நிவாரணத்தை நாங்கள் தர முடியும்? எந்தெந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்ப முடியும்? ஆளுநர்கள் ஏன் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்கள்?" என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி பொறுப்பேற்பு
புதன் 19, பிப்ரவரி 2025 4:23:57 PM (IST)

ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம் ஊழியர்களின் பணி நேரம் குறைப்பு: தெலுங்கானா அரசு அறிவிப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 11:23:45 AM (IST)

அரசுப்பள்ளிகளில் மதிய உணவில் கடலை மிட்டாய் வழங்க தடை: கர்நாடக அரசு உத்தரவு
புதன் 19, பிப்ரவரி 2025 11:18:08 AM (IST)

இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமனம்: காங்கிரஸ் கண்டனம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 5:27:17 PM (IST)

டெல்லியில் கடுமையான நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின - பொதுமக்கள் அச்சம்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 11:01:28 AM (IST)

கண்ணாடியை உடைத்து காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில் ஏற முயன்ற வடமாநில பயணிகள்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 10:12:01 AM (IST)
