» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரயாக்ராஜ் கும்பமேளா நிறைவு : 45 நாட்களில் 67 கோடிக்கும் மேல் பக்தர்கள் திரண்டு நீராடல்!

புதன் 26, பிப்ரவரி 2025 9:14:23 PM (IST)



உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெறுகிறது.  45 நாட்களில்சுமார் 67 கோடி பக்தர்கள் பிரயாக்ராஜில் புனித நீராடினர். 

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமம் உள்ளது. 3 நதிகள் சந்திக்கும் அந்த பகுதியில் புனித நீராடுவது மிக மிக புனிதமானது என்ற மரபு உள்ளது. இது கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலை கடைந்த புராண வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்கும்.

பாற்கடலை கடைந்த போது கிடைத்த அமிர்தத்தை ஒரு பெரிய குடத்தில் (கும்பத்தில்) தேவர்கள் சேகரித்தனர். அப்போது அதை கைப்பற்ற அசுரர்கள் முயற்சி செய்தனர். அப்போது ஏற்பட்ட போட்டியில் அமிர்த குடத்தில் இருந்து 4 துளிகள் சிந்தின. அந்த 4 துளிகளும் பிரயாக்ராஜ், அரித்துவார், உஜ்ஜையினி மற்றும் நாசிக் ஆகிய 4 நகரங்களில் விழுந்தன. அந்த 4 இடங்களிலும் புனித ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகள் சந்தித்துக் கொள்ளும் இடங்களில் புனித நீராடுவது அமிர்தம் பெற்றதற்கு சமமாக கருதப்படுகிறது.

இதனால்தான் இந்த 4 நகரங்களிலும் மிக மிக கோலாகலமாக கும்பமேளா நடக்கிறது. அமிர்தம் சிந்திய பிரயாக்ராஜ், அரித்துவார், உஜ்ஜையினி, நாசிக் ஆகிய 4 நகரங்களிலும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி கும்பமேளா நடைபெறுகிறது. 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரித்துவாரி லும், பிரயாக்ராஜிலும் "அர்த் கும்ப்’ (அரை கும்பம்) மேளா கொண்டாடப்படுகிறது. 4 புனிதத் தலங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்ண கும்பமேளா (முழுமையான கும்பமேளா) நடைபெறுகிறது. 

பிரயாக்ரா ஜில் மட்டும் 12-வது பூர்ண கும்ப மேளா, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவாகக் கொண்டாடப்படுகிறது. அதனால்தான் இப்போதைய மகா கும்பமேளா முக்கியத்துவம் பெறுகிறது. கும்பமேளா நடைமுறையை ஏற்படுத்திய வர் ஆதிசங்கரர் என்று கருதப்படுகிறது. நாடு தழுவிய அளவில் மடாதி பதிகளும், துறவிகளும் கூடும் சங்கமமாகக் கும்ப மேளாவை அவர்தான் உருவாக்கியதாக சொல்கிறார்கள்.

கங்கையும், யமுனையும், நிலத்தடி நீராக சரஸ்வதியும் ஒன்றுகூடும் இடத்தில், பல மைல் தூரம் நடந்துசென்று மூழ்கிக் குளிப்பதன் மூலம் தங்களது முற்பிறவிப் பாவங்கள் தொலைகின்றன என்று காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதனால்தான் வடமாநில மக்கள் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடுவதை மிகப்பெரிய கடமையாக கருதுகிறார்கள். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா தற்போது உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது.

கடந்த மாதம் 13-ந்தேதி பவுர்ணமி தினத்தன்று பிரயாக்ராஜ் கும்பமேளா புனித நீராடல் தொடங்கியது. கோடிக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் மத்திய அரசு பிரயாக்ராஜ் கும்பமேளா ரூ.2,100 கோடியும், உத்தரபிரதேச மாநில அரசு ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்து பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

பிரயாக்ராஜ் மாவட்டத்தில், இதற்காகவே ஓர் இடைக்கால நகரம் உருவாக்கப்பட்டது. மத்திய அரசும், மாநில அரசும் எதிர்பார்த்தது போல தினமும் லட்சக்க ணக்கான மக்கள் அலை அலையாக கும்பமே ளாவுக்கு திரண்டனர். இந்துத் துறவிகள், மடாதிபதிகள், உடல் முழுவதும் திருநீறுடன் காணப்படும் நாக சாதுக்கள், மண்டை ஓடு மாலையும், கையில் சூலாயுதம், வாள் ஏந்திய அகோரிகள் அனைவரும் கூடும் நிகழ்வு "கும்பமேளா’. இவர்களைப் பார்க்கவும், அவர்களிடம் ஆசி பெறவும், 3 நதிகள் கூடும் சங்கமத்தில் புனித நீராடவும் உலகெங்கும் இருந்து குவியும் பக்தர்கள் கும்பமேளாவின் தனிச்சிறப்பு.

இதுவரையில் சுமார் 65 கோடி பக்தர்கள் பிரயாக்ராஜில் புனித நீராடினார்கள். நேற்று 1.33 கோடி பேர் திரண்டு புனித நீராடினார்கள். இன்று அதிகாலை திரிவேணி சங்கமத்துக்கு சாதுக்களும், பக்தர்களும் அலை அலையாக வந்தனர். இதனால் இன்று 2 முதல் 3 கோடி பேர் வரை புனித நீராட திரண்டதாக கணிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் கடந்த 45 நாட்களில் தொடங்கி இன்று நிறைவு வரை சுமார் 67 கோடி பேர் வரை புனித நீராடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி "ஒற்றுமைக்கான மகா யாகம்’ என்று வர்ணித்து உள்ளார். உலகில் மிக அதிக அளவில் பக்தர்கள் அமைதி யாக ஒருங்கிணையும் திரு விழா என்று "யுனெஸ்கோ’ மதிப்பிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory