» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகாவில் பறவை காய்ச்சல் பரவல் அதிகரிப்பு : ஆயிரக்கணக்கான கோழிகள் அழிப்பு!

ஞாயிறு 2, மார்ச் 2025 11:09:20 AM (IST)

பறவை காய்ச்சல் பரவலை தொடர்ந்து சிக்பள்ளாப்பூர், பல்லாரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கோழிகளை கொன்று அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மராட்டியம், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோயால் கோழிகள், பறவைகள் பாதிக்கப்பட்டு செத்து வருகின்றன. இதனால் எல்லையில் உள்ள கர்நாடகத்திலும் பறவை காய்ச்சல் பரவலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் கர்நாடகத்தில் சிக்பள்ளாப்பூர், பெலகாவி மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக சிக்பள்ளாப்பூர் மாவட்டம் வரதஹள்ளி கிராமத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.

இந்த கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார்கள். அங்கு ஏராளமான கோழிகள் செத்து மடிந்தன. இறந்துபோன கோழிகளின் மாதிரியை சேகரித்து கால்நடைத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இதில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. இதையடுத்து கால்நடைத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் வரதஹள்ளி கிராமத்தில் வீடு, வீடாக சென்று பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்டு இருக்கிறதா? என கோழிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி வருகிறார்கள். 

இதில் பறவை காய்ச்சல் அறிகுறி உள்ள நூற்றுக்கணக்கான கோழிகளை நேற்று முன்தினம் ஒரே நாளில் கால்நடைத்துறையினர் கொன்று, பெரிய குழி தோண்டி கிருமிநாசினி தெளித்து புதைத்தனர். மேலும் பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்டு கோழிகள் கொன்று புதைக்கப்பட்ட பகுதியை அபாய பகுதியாக அறிவித்து எச்சரிக்கை பலகையும் வைத்தனர். அத்துடன் பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட கோழிகளை வளர்த்த வீடுகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. நேற்றும் வரதஹள்ளி கிராமத்தில் நூற்றுக்கணக்கான கோழிகளை கால்நடை துறை அதிகாரிகள் கொன்று அழித்தனர்.

இதுபோல் ராய்ச்சூர், பல்லாரி மாவட்டங்களிலும் கோழிகளை பறவை காய்ச்சல் தாக்கி வருகிறது. இதனால் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க கால்நடை துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பல்லாரி மாவட்டத்தில் உள்ள 84 கோழிப்பண்ணைகளிலும் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பறவை காய்ச்சல் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பறவை காய்ச்சல் பாதித்த ஆயிரக்கணக்கான கோழிகளை கால்நடைத் துறை அதிகாரிகள் கண்டறிந்து கொன்று அழித்து வருகிறார்கள். மாநிலம் முழுவதும் உஷார் செய்யப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory