» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டு சிறை: புதிய குடியேற்ற மசோதாவில் தகவல்!

திங்கள் 17, மார்ச் 2025 12:21:45 PM (IST)

இந்தியாவில் நுழைய போலி பாஸ்போர்ட், போலி விசா பயன்படுத்தினால் 7 ஆண்டுவரை சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம்வரை அபராதமும் விதிக்கப்படும் என்று புதிய குடியேற்ற மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

தற்போது, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான விவகாரங்களை கையாள பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் பதிவு சட்டம் உள்பட 4 சட்டங்கள் அமலில் உள்ளன. இந்நிலையில், மேற்கண்ட 4 சட்டங்களுக்கு பதிலாக, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா-2025 என்ற புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. கடந்த 11-ந் தேதி, இம்மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த மசோதாவில், தற்போதைய 4 மசோதாக்களில் ஏற்கனவே உள்ள பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், குடியுரிமை தொடர்பான எந்த அம்சமும் இடம்பெறவில்லை. இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுதல், அனுமதிக்கப்பட்ட நாட்களை தாண்டி வெளிநாட்டினர் தங்கியிருத்தல் ஆகிய பிரச்சினைகளை கையாள இம்மசோதா பயன்படுகிறது.

இந்த மசோதா நிறைவேறியவுடன், பழைய 4 மசோதாக்களும் ரத்து செய்யப்படும். சட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கைக்கேற்ப இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: இந்தியாவில் நுழைவதற்கும், தங்குவதற்கும், வெளியேறுவதற்கும் போலி பாஸ்போர்ட்டையோ அல்லது போலி விசாவையோ அல்லது முறைகேடாக பெறப்பட்ட பயண ஆவணங்களையோ பயன்படுத்தினால் அவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு குறையாமலும், 7 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அத்துடன், ரூ.1 லட்சத்துக்கு குறையாமலும், ரூ.10 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும். உரிய பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் நுழையும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டுகள்வரையும், ரூ.5 லட்சம்வரை அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை விதிக்கப்படும்.

வெளிநாட்டினர் தங்கியிருக்கும் தகவலை ஓட்டல்கள், பல்கலைக்கழகங்கள், இதர கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவை தெரிவிப்பது கட்டாயம் ஆகும். அதன்மூலம் வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும். மேலும், விமானம் மற்றும் கப்பல்களில் வெளிநாட்டினர் வரும் தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும், கப்பல் நிறுவனமும் அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிப்பது அவசியம்.

வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மசோதா நிறைவேறினால், மேற்கண்ட தண்டனைகளும், விதிமுறைகளும் அமலுக்கு வரும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory