» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நள்ளிரவில் விவசாயிகள் கைது: அரியானா-பஞ்சாப் எல்லையில் பதற்றம் - போலீசார் குவிப்பு

வியாழன் 20, மார்ச் 2025 12:04:18 PM (IST)



பஞ்சாப் - ஹரியானா எல்லையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் அகற்றிய நிலையில், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

அரியானா மற்றும் பஞ்சாப்பை ஒட்டிய ஷம்பு எல்லை பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், பஞ்சாப் போலீசார் நேற்று மாலை அந்த பகுதிக்கு சென்று போக்குவரத்துக்கு தடையாக இருந்த தடுப்பான்களை அகற்றினர். புல்டோசர்களை கொண்டும் அவற்றை இடித்து தள்ளினர்.

அவற்றுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையும் அகற்றினர். எனினும், இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு கொடுத்தனர் என்றும் அவர்களை கட்டாயப்படுத்தி அகற்றவில்லை என பாட்டியாலா சிறப்பு போலீஸ் சூப்பிரெண்டு நானக் சிங் கூறினார். இதனால், நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்துக்கு தயார் செய்யப்பட்டு உள்ளது.

அதேவேளையில், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள முக்கிய விவசாய தலைவர்களான ஜெகஜீத் சிங் தல்லேவால், சர்வன் சிங் பாந்தர் உள்ளிட்டோர் போலீசாரால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி தலைமையிலான அரசின் இந்த முடிவுக்கு விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அனைத்து அமைப்புகளும் போராட்டத்திற்கு தயாராக உள்ளன என கூறியுள்ளார். இதனால், எல்லையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஷம்பு எல்லையில் இன்று காலை அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக, உள்ளூர் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும், இளைஞர்களின் வேலைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன என பஞ்சாப் மந்திரி ஹர்பால் சிங் சீமா கூறினார். விவசாயிகளின் கோரிக்கைகள் மத்திய அரசுக்கு எதிராக உள்ளன. அவர்கள் டெல்லிக்கு சென்று போராட வேண்டும். அதற்கு பதிலாக, பஞ்சாப் சாலைகளில் இருந்து கொண்டு மறியலில் ஈடுபட கூடாது என கூறினார்.

எல்லையில் தடுப்பான்கள், தடைகள் அகற்றப்பட்ட பின்னர், வாகன போக்குவரத்து விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கவனத்துடன் பரிசீலித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory