» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது!

சனி 22, மார்ச் 2025 8:40:41 AM (IST)


டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்க சென்றபோது, அவரது வீட்டுக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எழுப்பியது.

டெல்லி ஐகோர்ட்டில் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. ஹோலிப் பண்டிகை விடுமுறைக்காக சென்று இருந்தார். அப்போது டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ வீட்டில், திடீரென்று தீப்பிடித்துள்ளது. இதுபற்றி அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர்.

வீட்டில் பிடித்த தீயை அணைத்தனர். அப்போது வீட்டில் இருந்த ஒரு அறையை திறந்தபோது அங்கு கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.15 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான 5 பேர் கொண்ட கொலீஜியம் அவசரமாக கூடியது. அந்த கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அனுப்ப டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில மூத்த கொலீஜியம் உறுப்பினர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே சம்பந்தப்பட்ட நீதிபதியை அலகாபாத் கோர்ட்டுக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரைத்ததாக பரவிய தகவல் உண்மையல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் பற்றி டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயாவிடம், மூத்த வக்கீல் ஒருவர் தனது வேதனையையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினார். அதற்கு தலைமை நீதிபதி, எல்லோரும் அப்படித்தான். எங்களுக்கும் தெரியும் என்றார்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்ததாக வந்த தகவலையடுத்து, அலகாபாத் உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மீண்டும் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு இருப்பதை அறிந்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். இது ஒன்றும் குப்பைத்தொட்டி அல்ல என்று தெரிவித்தது.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் நேற்று எதிரொலித்தது.

மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் இந்த பிரச்சினையை எழுப்பி பேசுகையில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அதிக அளவு பணம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. நீதித்துறை பொறுப்புணர்வை அதிகரிப்பதற்கான ஒரு திட்டத்தை கொண்டு வர அரசுக்கு தேவையான வழிகாட்டுதல்களை நீங்கள் வழங்க வேண்டும் என்றார்.

அப்போது பேசிய மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், இந்த சம்பவம் உடனடியாக வெளிச்சத்திற்கு வராததுதான் என்னை மிகவும் பாதித்துள்ளது. வெளிப்படையான, முறையான பதில், நிச்சயமாக வரும் என்றார். மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை பதவி நீக்கக்கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் 55 பேர் கையெழுத்திட்டு மனு ஒன்றை கொடுத்துள்ளனர் என்றும் ஜெகதீப் தன்கர் கூறினார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் பவன் கேரா கூறுகையில், அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யைவிட தீயணைப்புத்துறை சிறப்பாக செயல்படுகிறது. நீதிபதியின் வீட்டில் இருந்து இவ்வளவு பெரிய தொகையை மீட்டெடுப்பது மிகவும் தீவிரமானது. வெறும் இடமாற்றத்தால் மட்டுமே அதை மூடிமறைக்க முடியாது என்று கூறினார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, இந்த விவகாரத்தில் கொலீஜியம் சரியான நடவடிக்கை எடுக்கும் என்றார்.

தீயணைப்புத்துறை மறுப்பு: 

இந்த பரபரப்புக்கு இடையே டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ அணைப்பு பணியின்போது பணம் எதுவும் கிடைக்கவில்லை என்று தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக டெல்லி தீயணைப்பு சேவைகள் துறை தலைவர் அதுல் கார்க் நேற்று கூறியதாவது: டெல்லி லுட்யன்ஸ் பகுதியில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக கடந்த 14-ந் தேதி இரவு 11.35 மணிக்கு, கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. உடனடியாக 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்பு வீரர்கள் இரவு 11.43 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்தனர். தீயை கட்டுப்படுத்த 15 நிமிடங்கள் ஆனது. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

தீயை அணைத்த சிறிது நேரத்திலேயே, தீ விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். அதன் பிறகு, தீயணைப்புத்துறை ஊழியர்கள் குழு அங்கிருந்து வெளியேறியது. தீயணைப்பு நடவடிக்கையின் போது எங்கள் தீயணைப்பு வீரர்கள் எந்த பணத்தையும் கண்டுபிடிக்கவில்லை இவ்வாறு அதுல் கார்க் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory