» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தங்கள் ஊழலை மறைக்கவே மொழி பிரச்சினையை கிளப்புகிறார்கள் : தி.மு.க. மீது அமித்ஷா தாக்கு
சனி 22, மார்ச் 2025 8:44:22 AM (IST)
தங்கள் அரசியல் ஆதாயத்துக்காகவும், ஊழலை மறைக்கவும் மொழி பிரச்சினையை கிளப்புவதாக தி.மு.க. மீது உள்துறை அமைச்சர் அமித்ஷா மறைமுகமாக சாடியுள்ளார்
மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இந்த கொள்கையை ஏற்காததால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியையும் மத்திய அரசு விடுவிக்க மறுத்து வருகிறது. மும்மொழி கொள்கை மூலம் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது. இதில் கல்வி மந்திரிக்கும், தமிழக எம்.பி.க்களுக்கும் இடையே மோதலும் உருவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இவ்வாறு மொழி பிரச்சினையில் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வை மத்திய உள்துறை அமைச்சர் நேற்று மறைமுகமாக சாடினார்.
உள்துறை அமைச்சக பணிகள் தொடர்பாக மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு பதிலளித்து பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது: சில கட்சிகள் தங்கள் சொந்த அரசியல் நலனுக்காக மொழி பிரச்சினையை எழுப்புகின்றன. தங்கள் ஊழலை மறைப்பதற்காக மொழி பிரச்சினைக்குப் பின்னால் மறைந்து கொள்கிறார்கள். இதுவே அவர்களுக்கான வலுவான பதில் ஆகும்.
ஒவ்வொரு இந்திய மொழியும் நாட்டின் ஒரு பொக்கிஷமாக உள்ளது. இந்தி மொழி பிற மொழிகளுக்கு போட்டி கிடையாது. மாறாக அவற்றுக்கு ஒரு நண்பனாகவே இருக்கிறது. இந்திய மொழிகள் தொடர்பாக புதிய துறை ஒன்று, உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித்துறையின் கீழ் உருவாக்கப்பட்டு உள்ளது.
டிசம்பர் மாதத்தில் இருந்து, அனைத்து முதல்-மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் பொதுமக்களுக்கு உள்துறை அமைச்சகம் சார்பில் நான் அனுப்பும் அனைத்து கடிதங்களும் அவர்களது சொந்த மொழியிலேயே இருக்கும். மொழியின் பெயரால் நாட்டை துண்டாட நினைப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்காமல் இருக்க நான் இதைச் சொல்ல விரும்புகிறேன். அனைத்து இந்திய மொழிகளையும் பரப்புவதற்காக இந்திய மொழிகளுக்கான ஒரு துறையை மோடி அரசு நிறுவியுள்ளது.
தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, அசாமீஸ் என ஒவ்வொரு மொழியும் அதில் இணைக்கப்படும். அத்துடன் மொழி பெயர்ப்புக்கான செயல்களும் அதில் இருக்கும். தென் இந்திய மொழிகளுக்கு எதிரானது என மத்திய அரசை சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். அது எப்படி முடியும்? நான் குஜராத்தில் இருந்து வருகிறேன். நிர்மலா சீதாராமன் ஜி தமிழ்நாட்டில் இருந்து வருகிறார்.
பிராந்திய மொழிகளின் மேம்பாட்டுக்காக மோடி அரசு உழைக்கிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை இந்திய மொழிகளில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு 2 ஆண்டுகளாக இதை சொல்லி வருகிறோம். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் வழங்க உங்களுக்கு தைரியம் இல்லை. ஏனெனில் உங்கள் பொருளாதார நலன்கள் பாதிக்கப்படும்.
ஆனால் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்போது, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் வழங்குவோம். மொழியின் பெயரால் விஷத்தை பரப்புபவர்கள் ஒரு வெளிநாட்டு மொழிக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். ஆனால் இந்திய மொழியை ஏற்கவில்லை.
இந்தியை கற்றால் தமிழ் இளைஞர்கள் குஜராத், காஷ்மீர், டெல்லியில் பணியாற்ற முடியும். நீங்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். என்ன மாதிரியான அமைப்பை நீங்கள் விரும்புகிறீர்கள்? மொழியின் பெயரால் நாட்டில் போதுமான அளவுக்கு பிளவுகள் நடந்து விட்டன. இனியும் அதுபோன்ற பிரிவினை நடக்கக்கூடாது. உங்கள் ஊழலை மறைப்பதற்கு மொழியை பயன்படுத்தாதீர்கள். நாங்கள் கிராமம்தோறும் சென்று மக்களிடம் இதை தெரிவிப்போம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
முன்னதாக அமித்ஷாவின் பேச்சுக்கு இடையே குறுக்கிட்ட மதி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய அரசு இந்தியை திணிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பா.ஜனதா எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 3, ஏப்ரல் 2025 11:37:00 AM (IST)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:22:22 AM (IST)

வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் : கிரண் ரிஜிஜு
புதன் 2, ஏப்ரல் 2025 3:28:20 PM (IST)

மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை: காங்கிரஸ்
புதன் 2, ஏப்ரல் 2025 12:09:49 PM (IST)

இடிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:40:05 PM (IST)

இலங்கையிடம் படகுகளை இழந்த மீனவர்களுக்கு என்ன நிவாரணம்?.. கனிமொழி எம்.பி. கேள்வி
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:14:12 PM (IST)
