» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமையும்: இபிஎஸ் சந்திப்புக்குப் பிறகு அமித்ஷா நம்பிக்கை
புதன் 26, மார்ச் 2025 11:25:23 AM (IST)

2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பிற்கு பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். கடந்த மாதம் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக டெல்லியில் திறந்துவைத்த அதிமுக அலுவலகத்தை அவர் பார்வையிட்டார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், மு.தம்பிதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பழனிசாமி டெல்லி சென்றிருப்பது குறித்து நேற்று பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், `எதிர்க்கட்சி தலைவர் யாரைச் சந்திக்க டெல்லி சென்றுள்ளார் என்ற செய்தி வந்துள்ளது' என்று தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருந்த பழனிசாமி, கடந்த மக்களவைத் தேர்தலை பாஜக இல்லாமல் சந்தித்தார். அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. ஆனால், தேர்தலுக்கு முன்பே அதிமுகவின் 2-ம் கட்டத் தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி சேர தொடர்ந்து விருப்பம் தெரிவித்திருந்தனர்.
தேர்தல் முடிவுக்கு பின்னர், `தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால், கணிசமான இடங்களைப் பெற்று இருக்கலாம்' என்று அவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால், வலுவான கூட்டணியை அமைக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
பாஜகவின் தேசிய மற்றும் மாநிலத் தலைமையும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம், அதிமுகவின் 2-ம் கட்டத் தலைவர்கள், பாஜக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்கலாம் என்று பழனிசாமியிடம் தெரிவித்து வருகின்றனர். அதனால் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்ததும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது, தமிழகத்தின் அரசியல் நிலவரம், கூட்டணி மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாக அவர்கள் பேசியிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து அமித்ஷா தனது எக்ஸ் வலைதளத்தில், ‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 3, ஏப்ரல் 2025 11:37:00 AM (IST)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:22:22 AM (IST)

வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் : கிரண் ரிஜிஜு
புதன் 2, ஏப்ரல் 2025 3:28:20 PM (IST)

மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை: காங்கிரஸ்
புதன் 2, ஏப்ரல் 2025 12:09:49 PM (IST)

இடிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:40:05 PM (IST)

இலங்கையிடம் படகுகளை இழந்த மீனவர்களுக்கு என்ன நிவாரணம்?.. கனிமொழி எம்.பி. கேள்வி
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:14:12 PM (IST)
