» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தி மூலம் பிற மொழிகளை நசுக்க நினைக்கவில்லை: ராஜ்நாத் சிங் பேச்சு!

ஞாயிறு 30, மார்ச் 2025 10:55:23 AM (IST)



இந்தி மூலம் பிற மொழிகளை நசுக்க நினைக்கவில்லை; இணைப்பை ஏற்படுத்த மத்திய அரசு விரும்புவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை வெளிக்கொணரும் முயற்சியை பா.ஜனதா மேற்கொண்டது. இதன் அடிப்படையில் பா.ஜனதா மகளிரணி, வீர மங்கை வேலு நாச்சியாரை கொண்டாடுகிறது. வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் வகையில் டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பா.ஜனதா தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

டெல்லி முதல்-அமைச்சர் ரேகா குப்தா, ஒடிசா துணை முதல்-அமைச்சர் பிரவதி பரிதா, ராஜஸ்தான் துணை முதல்-அமைச்சர் திவ்யா குமாரி ஆகியோரும் பங்கேற்றனர். மேலும் பா.ஜனதா அமைப்பு செயலாளர் பி.எல். சந்தோஷ், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசும்போது, "நாட்டில் ஜான்சி ராணியை அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே ஆங்கிலேயர்களை எதிர்த்த வீராங்கனை வேலு நாச்சியார் ஆவார். அதைப்போல அவரது படையில் இருந்த குயிலியையும் நான் நினைவுகூர்கிறேன்.

பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். மோடி பிரதமரான பிறகுதான் அது நடக்கிறது. நாங்கள் இந்தி மொழிக்கு மட்டும் அல்ல, அனைத்து மொழிகளுக்கும் மரியாதை தருகிறோம். பிற மொழிகளை நசுக்க நினைக்கவில்லை. இந்தி மூலம் இணைப்பையே ஏற்படுத்த விரும்புகிறோம்” என்றார். நிகழ்ச்சியில் வேலுநாச்சியாரைப் பற்றிய சித்திர புத்தகம் வெளியிடப்பட்டது. நாடகமும் நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory