» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழ்நாட்டில் இந்தியை தைரியமாக எதிர்க்கிறார்கள் : ராஜ்தாக்கரே பாராட்டு

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:51:46 AM (IST)



தமிழ்நாட்டில் இந்தியை தைரியமாக எதிர்க்கிறார்கள் என்று மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கூறினார்.

மராட்டியத்தில் மண்ணின் மைந்தர்கள் கொள்கையை கடைப்பிடித்து வரும் நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக்கூட்டம் மும்பை தாதரில் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி தலைவர் ராஜ்தாக்கரே பேசியதாவது: நமது மும்பைக்கு வருபவர்கள் (வெளிமாநிலத்தினர்) தங்களால் மராத்தி பேச முடியாது என கூறுகிறார்கள். அது போன்றவர்களின் கன்னத்தில் அறைய வேண்டும். நாடு பற்றி எல்லாம் என்னிடம் எதுவும் கூறாதீர்கள். 

எல்லா மாநிலத்துக்கும் அவர்களின் மொழி உள்ளது. அது கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும். மும்பையில் மராத்தி மதிக்கப்பட வேண்டும். நாளை முதல் எல்லா வங்கி மற்றும் கடைகளில் சோதனை நடத்துங்கள். அங்கு மராத்தி மொழி பயன்படுத்தப்படுகிறதா என பாருங்கள்.

நீங்கள் எல்லோரும் மராத்திக்கு ஆதரவாக உறுதியாக நிற்க வேண்டும். தமிழ்நாட்டை பாருங்கள், இந்தி வேண்டாம் என தைரியமாக கூறுகிறார்கள். கேரளாவும் கூட அதை செய்கிறது. வாட்ஸ் அப் மற்றும் சாதிய கோணத்தில் வரலாறை படிக்க வேண்டாம் என இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன். உங்களை அரசியல் ரீதியாக பிரிக்கவும், மராத்தியர்களாக நீங்கள் ஒன்று சேர்வதை தடுக்கவும் இது செய்யப்படுகிறது. உங்கள் கவனத்தை திசை திருப்பவும், அதானிக்கு சத்தமில்லாமல் நிலங்களை வழங்கவும் நீங்கள் சாதி ரீதியாக பிரிக்கப்படுகிறீர்கள்.

அதானி மும்பை விமான நிலையத்தை நடத்துகிறார். நவிமும்பை விமான நிலையத்தை கட்டுகிறார். தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை செய்கிறார். அதானி நாம் அனைவரையும் விட அதிக புத்திசாலியாக மாறிவிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

மும்பையில் உள்ள ‘டி-மார்ட்’ சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரிடம் மராத்தியில் பேச மறுத்து இந்தியில் பேசியதன் காரணமாக அவரை நவநிர்மாண் சேனாவினர் கன்னத்தில் அறைந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory