» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு

வியாழன் 15, மே 2025 8:45:03 AM (IST)



இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்திய நீதித்துறை அமைப்பின் தலைமையகமான சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை 51 தலைமை நீதிபதிகள் பணியாற்றி உள்ளனர். 51-வது தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சீவ் கன்னா கடந்த 13-ந்தேதி ஓய்வுபெற்றார். இவரது ஓய்வுக்கு முன்பே அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாயை (பூஷன் ராமகிருஷ்ண கவாய்) கொலீஜியம் (நீதிபதிகளை பரிந்துரைக்கும் அமைப்பு) பரிந்துரைத்தது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில் புதிய தலைமை நீதிபதியின் பதவியேற்பு விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள கணதந்திர மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவிப்பிரமாண உறுதிமொழியை வாசித்து பதவியேற்றுக் கொண்ட பி.ஆர்.கவாய், பதவியேற்பு ஆவணத்தில் கையெழுத்திட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, சட்டத்துறை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால் உள்ளிட்டோருக்கு வணக்கம் தெரிவித்தார். 

பின்னர் தனது தாயார் கமலாவின் கால்களைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, மத்திய நகர்ப்புற விவகாரங்கள்துறை மந்திரி மனோகர் லால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், மராட்டிய மாநிலம் அமராவதியைச் சேர்ந்தவர். 1960-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி பிறந்தார். 1985-ம் ஆண்டு சட்ட வாழ்க்கையை தொடங்கினார். மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் அரசு உதவி வக்கீல், பிறகு அரசு வக்கீலாகவும் பணியாற்றினார்.

2003-ம் ஆண்டு ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதி ஆக்கப்பட்டார். நீண்டகாலம் ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த இவர், கடந்த 2019-ம் ஆண்டு மே 24-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தற்போது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று உள்ளார். வருகிற நவம்பர் 23-ந்தேதி வரை 6 மாத காலம் அவர் தலைமை நீதிபதியாக இருப்பார்.

இவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். குறிப்பாக மத்திய அரசின் பண மதிப்பிழப்பு முடிவை உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திர திட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கப்பட்ட தீர்ப்பு போன்றவற்றை சொல்லலாம்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370-ஐ ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை உறுதி செய்த 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்விலும் அவர் இடம்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 300 தீர்ப்புகளை எழுதியுள்ளார்.

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தாழ்த்தப்பட்டோர் பிரிவில் இருந்து தலைமை நீதிபதி ஆன 2-வது நபர் என்பதும், புத்த மதத்தை பின்பற்றும் முதல் தலைமை நீதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது குடும்ப பின்னணியும் பெரியது. இவருடைய தந்தை ஆர்.எஸ்.கவாய், இந்திய குடியரசு கட்சியின் ஒரு பிரிவு தலைவர் ஆவார். எம்.பி. மற்றும் கவர்னராகவும் இருந்துள்ளார். பி.ஆர்.கவாயின் சகோதரர் தற்போது அந்த கட்சியை வழிநடத்துகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory