» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆகம விதிக்குட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை!!

வியாழன் 15, மே 2025 11:47:14 AM (IST)

தமிழகத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் முதல்வராக இருந்த மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு சட்டம் இயற்றியது. தொடர்ந்து அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக்காலம், பூஜைமுறைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்கியது.

அதன் அடிப்படையில், 2007-ல் திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மதுரை, பழனி, திருச்செந்தூர் ஆகிய 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் அமைக்கப்பட்டன. 240 மாணவர்கள் இப்பயிற்சியில் சேர்ந்த நிலையில், 2008-ல் 207 பேர் பயிற்சி முடித்தனர். இந்நிலையில், ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் வழக்கு தொடர்ந்து, அரசின் முடிவை எதிர்த்து தடை உத்தரவு பெற்றது. இதனால் அந்த மாணவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 2015-ல் தீர்ப்பளித்தது. அப்போது, ஆகமவிதிப்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள கோயில்களில் அதே முறையில்தான் நியமனம் நடைபெற வேண்டும் என தெரிவித்தது. ஆனால், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிகப்படுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், அர்ச்சகர் நியமனத்தில் 2019-ல் புதிய விதிகளை அறநிலையத்துறை வெளியிட்டது. 

இதன் மூலம், சிறிய கோயில்களில் இருவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. அதன்பின் 2021-ல் திமுக அரசு பதவியேற்ற நிலையில், ஆக.14-ம் தேதி 28 பேருக்கு பணி நியமனம் வழங்கியது. இதை எதிர்த்து மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2022-ல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், தமிழக அரசின் விதிகள் செல்லும் என்றும், ஆகம விதிகள் படி இயங்கும் கோயில்களில், அந்தந்த ஆகம விதிப்படி அரச்சகர்களை நியமிக்கலாம் என வும் தீர்ப்பளித்தது. கோயில்கள் குறித்து கண்டறிய 5 பேர் அடங்கிய குழுவையும் அமைத்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஆகம விதிகளுக்கு முரணாக கோயில்களில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் நியமிப்பதற்கு அதிகாரிகளுக்கு தடை விதிக்க, அனைத்திந்திய ஆதிசைவ சிவாச்சாரியர்கள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கத் தலைவர் அரங்கநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அதில், "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்காக கடந்த 2006-ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின்படி, அர்ச்சகர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது வரை எந்த ஒரு பணி நியமனமும் கிடைக்கவில்லை. அரசாணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால், பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கானவர்களுக்கு பணி கிடைக்காமல், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, எங்களை தகுதி, பயிற்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் செய்ய உத்தரவிடும் விதமாக, வழக்கை விரைவாக முடித்து உத்தரவிட வேண்டும.

மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். இந்த வழக்கில் எங்கள் தரப்பின் இடையீட்டு மனுவையும் ஏற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பாக நேற்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில், "தமிழகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியிடம் காலியாக உள்ளது. எனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் குமணன், "தமிழகத்தில் குறைந்த அளவில் தான் ஆகம விதிக்குட்பட்ட கோயில்கள் உள்ளன. எனவே, ஆகம விதிக்குட்பட்ட கோயில்களை தவிர்த்து, ஆகமவிதிக்கு உட்படாத கோயில்களில் நியமிக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு "ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களை தவிர்த்துவிட்டு, ஆகம விதிக்கு உட்படாத கோயில்களில் மட்டுமே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும். அடுத்த 3 மாதங்களுக்குள் தமிழகத்தில் ஆகம விதிக்கு உட்படாத கோயில்களை தமிழக அரசு அடையாளம் காண வேண்டும்’’ என உத்தரவிட்டது. மேலும், ராமேசுவரம் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர்கள், மணியம் பணியிடங்களை தமிழக அரசு நிரப்பவும் அனுமதி வழங்கி, வழக்கை செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory