» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கன்னட மொழி பற்றி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு தடை: பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு!

ஞாயிறு 6, ஜூலை 2025 11:09:32 AM (IST)

கன்னட மொழி குறித்து பேச நடிகர் கமல்ஹாசனுக்கு தடை விதித்து பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைப்’ திரைப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் வெளியாகி விட்டது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து தான் கன்னட மொழி உருவானதாக பேசி இருந்தார். இதற்கு கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இதனால் அவரது ‘தக்லைப்’ படம் கர்நாடகத்தில் வெளியாகவில்லை.

இதுதொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டது. ஆனாலும் கர்நாடகத்தில் ‘தக்லைப்’ திரைப்படம் வெளியாகவில்லை. இதற்கிடையில், கன்னட இலக்கிய துறையின் தலைவர் மகேஷ் ஜோஷி, பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து கூறிய கருத்து மிகுந்த வேதனை அளிப்பதாகவும், கன்னடர்களுக்கு அவமரியாதையை கொடுத்திருப்பதாகவும், இதுபோன்ற பேச்சுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், நடிகர் கமல்ஹாசனின் பேச்சு கன்னடர்களின் மனநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால், இதுபோன்று அவர் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து, கன்னட மொழியை விட மற்ற மொழி சிறந்தது என்பன போன்ற கருத்துகளையும், கன்னட மொழிக்கு எதிரான கருத்துகளை கூறுவதற்கும், அதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடவும், அறிக்கைகளை வெளியிடுவதற்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு கோர்ட்டு தடை விதித்தது. கன்னட மொழி, இலக்கியம், பண்பாடு, கலாசாரத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிடவும் நீதிமன்றம் தடை விதித்தது. இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த மனு மீதான விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 30-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதுபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory