» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறிய பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைக்க மத்திய அரசு திட்டம்!

வியாழன் 11, டிசம்பர் 2025 11:07:37 AM (IST)

நாட்டில் உள்ள சிறிய 6 பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைக்க, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 

நாட்டின் வங்கித் துறையை பலமிக்கதாக மாற்றுவதற்கும், உலக நாடுகளுக்கு இணையாக வங்கித் துறையை கொண்டு வரவும், சிறிய பொதுத் துறை வங்கிகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பது அல்லது, பெரிய பொதுத் துறை வங்கியுடன் அனைத்து சிறிய பொதுத் துறை வங்கிகளையும் இணைப்பது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

தற்போது ஆறு பொதுத் துறை வங்கிகளை மையமாகக் கொண்டு இந்த திட்டம் நடந்து வருகிறது. அதாவது, பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, யூகோ வங்கி மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி என்பவைதான் அவை.

இந்த வங்கிகள் ஒன்றோடொன்று இணைக்கப்படலாம் அல்லது எதிர்காலத்தில் நடக்கும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின்போது பெரிய பொதுத்துறை வங்கிகளுக்குள் இந்த வங்கிகள் ஒருங்கிணைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவை பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி போன்ற பெரிய பொதுத் துறை வங்கிகளுடன் ஒன்றிணைக்கப்படலாம். இதனால், அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கு எண், வங்கி விவரங்கள் மாறலாம். இதனால், வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயர் மாறுவதோடு ஐஎஃப்சி கோடு மாறும். சில வங்கிகள் அருகில் இருக்கும் வங்கிக் கிளைக்கு மாற்றப்படும்.

புதிய காசோலைப் புத்தகம், வங்கிக் கணக்குப் புத்தகம், ஏடிஎம் வழங்கப்படும். ஏற்கனவே வைத்திருக்கும் மொபைல் செயலி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், இந்த நடவடிக்கை பரிந்துரையில் உள்ளது. 2026 - 27ஆம் நிதியாண்டில் இந்த ஒருங்கிணைப்புப் பணிகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 2017 - 2020ஆம் ஆண்டு காலத்தில் சில பொதுத் துறை வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டன. அதாவது, பாரத ஸ்டேட் வங்கி தன்னுடைய ஆறு இணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், பாரதிய மகிளா வங்கி ஆகியவற்றை ஒருங்கிணைத்திருந்தது.

விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி, பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டன. இதுபோல, ஓரியண்டல் வணிக வங்கி மற்றும் யுனைட்டட் இந்தியா வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனர் வங்கியுடன் இணைக்கப்பட்டன.தொடர்ந்து கனரா வங்கி - சிண்டிகேட் வங்கி, யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவையும், இந்தியன் வங்கி அலகாபாத் வங்கியுடனும் இணைக்கப்பட்டன. அதாவது, பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கையை 12ல் இருந்து 6 - 7 ஆக மிகப்பெரிய வங்கிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory