» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி: மும்பை, புனே, நாக்பூர் மாநகராட்சிகள் பாஜக வசம்!

சனி 17, ஜனவரி 2026 10:13:06 AM (IST)


மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 29 மாநகராட்சிகளில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 25 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றுகிறது.

மகாராஷ்டிராவில் முதல்கட்டமாக நகராட்சிகள், பேரூராட்சிகள் என 288 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிசம்பர் 2-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 207 நகராட்சிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.

இதன் தொடர்ச்சியாக, மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு கடந்த 15-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மாநகராட்சிகளுக்கு ஏற்ப கூட்டணிகள் மாறின. இந்நிலையில், முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மும்பை, புனே, நாக்பூர் மும்பை மாநகராட்சியில் மொத்தம் 227 வார்டுகள் உள்ளன. இதில் பாஜக 87 வார்டுகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 27 வார்டுகளில் வெற்றி பெற்றது. இந்தமாநகராட்சியில் பெரும்பான்மையை நிரூபிக்க 114 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை.

ஆளும் பாஜக கூட்டணி அறுதிப்பெரும்பான்மையை எட்டி மும்பை மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 62 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுமார் 30 ஆண்டுகளாக தாக்கரே குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மும்பை மாநகராட்சியில் முதல்முறையாக பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 15 வார்டுகள் கிடைத்தன.

மும்பையின் தாராவி பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இங்கு உள்ள 7 வார்டுகளில் 4 வார்டுகளில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, 2 வார்டுகளில் காங்கிரஸ், ஒரு வார்டில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா வெற்றி பெற்றுள்ளது. புனே மாநகராட்சியில் 165 வார்டுகள் உள்ளன.

இதில் பாஜக 90 வார்டுகளில் வெற்றி பெற்று புனே மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. நாக்பூர் மாநகராட்சியின் 151 வார்டுகளில் பாஜக 104 வார்டுகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. தானே மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 131 தொகுதிகளில் பாஜக, ஷிண்டே அணி கூட்டணி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு ஒரு வார்டுகூட கிடைக்கவில்லை.

இதுமட்டுமின்றி, சத்ரபதி சாம்பாஜிநகர், நாசிக், நவி மும்பை, கல்யாண்-டொம்பிவிலி உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. வசாய்-விரார் மாநகராட்சியின் 115 வார்டுகளில் பகுஜன் விகாஸ் அகாடி கட்சி 71 இடங்களை பெற்று மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. பர்பானி மாநகராட்சியின் 65 வார்டுகளில் உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே கூட்டணி 36 வார்டுகளில் வெற்றி பெற்று அந்த மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory