» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வங்காளதேசத்தில் வணிக வளாத்தில் பயங்கர தீ விபத்து: 43 பேர் பலி!
வெள்ளி 1, மார்ச் 2024 11:18:52 AM (IST)
வங்காளதேசத்தில் வணிக வளாத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.
வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் பெய்லி சாலையில் 7 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வணிக வளாகங்கள், உணவகங்கள், செல்போன் கடைகள் உள்பட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்துள்ள பிரியாணி கடையில் நேற்று இரவு 10 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரியாணி கடையில் பற்றிய தீ அடுக்குமாடி கட்டிடத்தின் மேல்தளத்திற்கு மளமளவென பரவியது.
இதில், அடுக்குமாடி கட்டிடத்தில் மேல்தளத்தில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர். இந்த தீ விபத்து குறித்து அறிந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பிரியாணி கடையில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.