» செய்திகள் - விளையாட்டு » உலகம்
லெபனானில் ஒரே நேரத்தில் வெடித்த பேஜர் கருவிகள்: 8 பேர் பலி, 2,750 பேர் படுகாயம்
புதன் 18, செப்டம்பர் 2024 5:21:22 PM (IST)
லெபனானில் ஒரே நேரத்தில் பேஜர் கருவிகள் வெடித்துச் சிதறியதால் 8 பேர் உயிரிழந்தனர். 2,750 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், லெபனானில் நேற்று பிற்பகலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 2,750 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காசா போர் தொடங்கிய பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஸ்புல்லா அமைப்பினரை செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அவர்கள் பயன்படுத்தி வந்த பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஜர் கருவிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் அதிகமாக சூடேறியதால் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும், இது இஸ்ரேலின் சைபர் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை பதிலளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.