» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சவூதி அரேபிய அரசை விமர்சித்த ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை!
வியாழன் 26, செப்டம்பர் 2024 10:32:50 AM (IST)
அரசை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சவூதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் ஓய்வுபெற்ற ஆசிரியர் முகமது அல் காம்தி என்பவர் எக்ஸ் தளப்பக்கத்தில் வெறும் 9 பாலோயர்களைக் கொண்டுள்ளார். அதில் அரசுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வந்தார். இதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜூலை 2023-ம் ஆண்டு அவருக்கு சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த கோர்ட், கடந்த ஆகஸ்ட் மாதம், மரண தண்டனையை ரத்து செய்ததது. இதனை தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, இணையத்தில் இதே போன்ற விமர்சனங்களுக்காக காம்தியின் சகோதரர் ஆசாத் அல்-காம்டிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆசாத்தின் தண்டனை மறுபரிசீலனை செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. கருத்து சுதந்திரத்திற்கு எதிராக சவூதி அரசு தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.