» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சகாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!
ஞாயிறு 13, அக்டோபர் 2024 10:21:52 AM (IST)
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சகாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சகாரா பாலைவனமே உலகின் மிகப்பெரிய வறண்ட நிலமாக கருதப்படுகிறது. மொராக்கோ, எகிப்து, சூடான் உள்ளிட்ட 11 நாடுகளில் இந்த பாலைவனம் அமைந்துள்ளது. எனினும் மொராக்கோவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சகாரா பாலைவனமே சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. அங்கு பகலில் எந்த அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறதோ அதே அளவுக்கு இரவில் கடுமையான குளிர் நிலவும்.
இந்த பாலைவனத்தில் மழை என்பது அபூர்வம் ஆகும். அதாவது ஆண்டின் ஒருசில நாட்களில் மட்டுமே அங்கு மழை பொழிகிறது. இதனால் அந்த பகுதி எப்போதும் வறட்சியாக காணப்படும். இந்தநிலையில் மொராக்கோவின் சகாரா பாலைவனத்தில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள வறண்ட ஏரியான இரிக்கியில் நீர் நிரம்பியது.
இதனையடுத்து அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் அங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மொராக்கோ தேசிய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், `ஒரே நாளில் அங்கு 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்தது. வழக்கமாக இது ஓராண்டில் பெய்யும் மழையளவு ஆகும். இதன் காரணமாகவே இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது' என தெரிவித்தனர். எனினும் இந்த கனமழை காரணமாக அங்கு வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.