» செய்திகள் - விளையாட்டு » உலகம்
டிரம்பை கொல்ல மீண்டும் சதி: தேர்தல் பிரசாரத்தில் துப்பாக்கியுடன் நுழைந்தவர் கைது!
செவ்வாய் 15, அக்டோபர் 2024 8:58:25 PM (IST)
அமெரிக்காவில் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபரை போலீசார் கைது செய்தனர். டிரம்பை கொல்ல 3-வது முறையாக சதி நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (59), குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் (78) போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒருசில வாரங்களே உள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எனவே இரு தரப்பினரும் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கலிபோர்னியா மாகாணம் கோசெல்லாவில் குடியரசு கட்சி வேட்பாளரை ஆதரித்து டிரம்ப் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது டிரம்பின் உரையை கேட்பதற்காக ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டிருந்தனர்.
இந்த கூட்டத்தில் சந்தேகப்படும்படி ஒருவர் தனது கையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தார். பின்னர் அவர் டிரம்பை நோக்கி நெருங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தது வெம் மில்லர் (49) என்பதும், போலி அனுமதிச்சீட்டுடன் அங்கு அவர் நுழைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் கூட்டம் நிறைவடைந்த பிறகு ஜாமீனில் விடுவித்தனர்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் காதில் குண்டு உரசிச் சென்றதால் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். அதேபோல் கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள ஒரு கிளப்பில் கோல்ப் விளையாடியபோது டிரம்பை நோக்கி வெஸ்லே ரோத் என்ற நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக டிரம்பை கொல்ல சதியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.