» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஹமாஸ் தலைவர் படுகொலை: பணய கைதிகளை விடுவிக்க பிரான்ஸ் வலியுறுத்தல்
வெள்ளி 18, அக்டோபர் 2024 10:21:49 AM (IST)
ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்தது. ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் காசா பகுதியில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இந்த போரால் காசாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.
இதற்கிடையில், காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வந்து அங்குள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என இஸ்ரேல் அரசிடம் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி நடந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய புள்ளியான, ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வாரை இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்கி அழித்துள்ளது.
இது குறித்து பிரான்ஸ் இம்மானுவேல் மேக்ரான் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "அக்டோபர் 7-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் காட்டுமிராண்டித் தனமான செயல்களுக்கு யஹ்யா சின்வார் மூளையாக செயல்பட்டுள்ளார். அந்த தாக்குதலில் உயிரிழந்த 48 பிரான்ஸ் குடிமக்கள் உள்ளிட்ட அனைவரையும், அவர்களின் அன்புக்குரியவர்களையும் இன்று நான் நினைவு கூறுகிறேன். ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்துகிறது." இவ்வாறு இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.