» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைன் போருக்கு தீர்வுகாண முழு ஒத்துழைப்பு : புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதன் 23, அக்டோபர் 2024 8:38:29 AM (IST)



ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது அவர், உக்ரைன் போருக்கு தீர்வுகாண முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று தெரிவித்தார்.

ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் பிரதமர் மோடி அக்கறை செலுத்தி வருகிறார். இந்தியா-ரஷியா இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசினார்.

அப்போது, போர்க்களத்தில் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று புதினிடம் தெரிவித்தார். அமைதி வழியில் தீர்வு காணுமாறு வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து, ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி உக்ரைன் சென்றார். அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். ரஷியாவும், உக்ரைனும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு, ரஷியாவில் உள்ள கசான் நகரில் நடக்கிறது. இது 3 நாள் மாநாடு ஆகும். ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில், இந்தியா, ரஷியா, சீனா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஈரான், எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உலகளாவிய வளர்ச்சி, பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகிய கருப்பொருளை மையமாக வைத்து இந்த மாநாடு நடக்கிறது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி நேற்று காலை தனி விமானம் மூலம் ரஷியா புறப்பட்டார். அவர் அங்கு செல்வது, இந்த ஆண்டில் இது 2-வது தடவை ஆகும். நேற்று பிற்பகலில் அவர் கசான் நகருக்கு போய்ச் சேர்ந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கசான் நகர் அடங்கிய டடார்ஸ்டன் குடியரசின் தலைவர் அன்புடன் வரவேற்றார்.

இருபுறமும் ராணுவ வீரர்கள் நின்று பாரம்பரிய வரவேற்பு அளித்தனர். ரஷியாவுக்கான இந்திய தூதர் வினய்குமாரும் வரவேற்றார். ரஷியவாழ் இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், பிரதமர் மோடி தான் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டலுக்கு சென்றார். அங்கும் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பிறகு, அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். இருவரும் கைகுலுக்கியும், ஆரத்தழுவியும் அன்பை வெளிப்படுத்தினர். இருவருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ரஷியா-உக்ரைன் போர் விவகாரம், முக்கிய இடம்பிடித்ததாக தெரிகிறது.

பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, போரை முடிவுக்கு கொண்டுவர உதவுவதாக தெரிவித்தார். அவர் பேசியதாவது: கடந்த 3 மாதங்களில் இரண்டாவது தடவையாக நான் ரஷியாவுக்கு வந்துள்ளேன். இந்தியா-ரஷியா இடையிலான நெருங்கிய ஒருங்கிணைப்பையும், ஆழ்ந்த நம்பிக்கையையும் இது உணர்த்துகிறது.

ரஷியா-உக்ரைன் இடையே நடந்து வரும் போர் குறித்து நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். நான் ஏற்கனவே சொன்னதுபோல், போருக்கு அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். இந்த பிராந்தியத்தில் விரைவில் அமைதியும், நிலைத்தன்மையும் திரும்ப நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். மனிதாபிமான அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

ரஷியா-உக்ரைன் இடையிலான போருக்கு அமைதி தீர்வு காண்பதற்கு சாத்தியமான முழு ஒத்துழைப்பும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. இந்த பிரச்சினைகள் அனைத்தையும் பற்றி விவாதிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

பிரதமர் மோடி தனது உரையில், கசான் நகரை பற்றியும் குறிப்பிட்டார். அதுபற்றி அவர் பேசியதாவது: ‘பிரிக்ஸ்’ மாநாட்டுக்காக கசான் என்ற அழகிய நகருக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கசான் நகருடன் இந்தியாவுக்கு வரலாற்றுரீதியான, ஆழ்ந்த உறவு உள்ளது. கசான் நகரில் இந்திய தூதரகம் திறப்பதன் மூலம் இந்த உறவு மேலும் வலுப்படும்.

‘பிரிக்ஸ்’ அமைப்பின் தலைமை பொறுப்பை ரஷியா திறம்பட வகிப்பதற்கு புதினுக்கு வாழ்த்துகள். உலக அளவில் ‘பிரிக்ஸ்’ செல்வாக்கு பெற்றுள்ளது. அதில் சேர பல நாடுகள் விரும்புகின்றன.கடந்த ஜூலை மாதம் புதினுடன் நடத்திய பேச்சுவார்த்தையால் ஒவ்வொரு துறையிலும் ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

புதின் பேசுகையில், ‘‘ரஷியா-இந்தியா இடையிலான வர்த்தகம் வளர நல்ல சூழ்நிலை நிலவுகிறது’’ என்று கூறினார். சீன அதிபர் ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோரும் நேற்று கசான் நகருக்கு வந்து சேர்ந்தனர். இதற்கிடையே ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். கடந்த ஜூலை மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகியுள்ள மசூத்தை மோடி சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory