» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு? கருத்து கணிப்பு முடிவுகள் வெனியானது!
புதன் 23, அக்டோபர் 2024 4:27:03 PM (IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட புதிய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (78) போட்டியிடுகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் (59) களமிறங்கி உள்ளார். முன்னதாக ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் (81) அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் சொந்த கட்சியினரிடம் இருந்தே ஜோ பைடன் போட்டியிடுவதற்கு எதிர்ப்புகள் வலுத்தன. இதனால் அவர் போட்டியில் இருந்து விலகினார்.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இருவரும் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பின்னர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக களமிறங்கிய பிறகு ஜனநாயக கட்சிக்கான ஆதரவு அதிகரித்ததாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. அதிலும் குறிப்பாக பிலடெல்பியாவில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே நடைபெற்ற நேரடி விவாதம் கமலாவுக்கே சாதகமாக அமைந்தது என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.
இந்த நிலையில், எஸ்.எஸ்.ஆர்.எஸ். என்ற நிறுவனத்தின் சார்பில் சுமார் இரண்டாயிரம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட புதிய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த முடிவுகள் மூலம் கமலாவுக்கும், டிரம்புக்கும் மிக நெருக்கமான விகிதத்தில் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது. இதில் தெளிவான ஒரு வெற்றியாளரை அடையாளம் காண முடியவில்லை என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது.
இந்த புதிய கருத்து கணிப்பின்படி, அமெரிக்காவில் 48 சதவீதம் பேர் கமலாவுக்கு முழு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதே போல் டிரம்புக்கு 47 சதவீதம் பேர் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இரண்டு கட்சிகளையும் சாராத பொதுவான வாக்காளர்களில் 45 சதவீதம் பேர் கமலாவுக்கும், 41 சதவீதம் பேர் டிரம்புக்கும் வாக்கு செலுத்த உள்ளதாக கூறியுள்ளனர்.
இதில் குறிப்பாக இரு கட்சிகளையும் சாராத ஆண்கள் 47 சதவீதம் பேர் டிரம்புக்கும், 40 சதவீதம் பேர் கமலாவுக்கும் ஆதரவாக இருக்கின்றனர். அதே சமயம், இரு கட்சிகளையும் சாராத பெண்களில் 51 சதவீதம் பேர் கமலாவுக்கும், 36 சதவீதம் பேர் டிரம்புக்கும் வாக்கு செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் 30 வயதுக்கு குறைவான இளம் வாக்காளர்களில் 55 சதவீதம் பேர் கமலாவிற்கும், 38 சதவீதம் பேர் டிரம்புக்கும் ஆதரவாக உள்ளனர். இதனிடையே 12 சதவீதம் வாக்காளர்கள் இன்னும் தங்களால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.