» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்திய-சீன எல்லை பகுதியில் வீரர்கள் சுமூகமாக வெளியேற்றம் : சீனா தகவல்!
செவ்வாய் 5, நவம்பர் 2024 5:06:10 PM (IST)
கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் வீரர்களை வெளியேற்றுவது தொடர்பான இந்தியாவுடான ஒப்பந்தத்தை செயல்படுத்துவது சுமூகமாக நடப்பதாக சீன வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய-சீன எல்லையில் கல்வான் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு இருநாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பதற்றம் நீடித்து வந்தது. தொடர்ந்து நடந்து வந்த இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், கடந்த 2ம் தேதி முதல் இந்தியா, சீன ராணுவ வீரர்கள் வெளியேறினார்கள்.
ராணுவ வீரர்கள் வெளியேற்றம் முடிவடைந்ததை தொடர்ந்து டெம்சோக்கில் ரோந்து பணியை இந்தியா தொடங்கியுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்து இருந்தது.
இது குறித்து சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் மாவ் நிங் செய்தியாளர் சந்திப்பில், ‘‘எல்லைப்பகுதி தொடர்பான பிரச்னைகளில் இரு தரப்பும் எட்டிய ஒப்பந்தத்தை சீன மற்றும் இந்திய வீரர்கள் நடைமுறைப்படுத்துகின்றனர். இந்த செயல்முறை தற்போது சுமூகமாக நடந்து வருகின்றது” என்றார். எனினும் டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் இந்திய வீரர்கள் ரோந்து பணியை தொடங்கியது குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.