» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து!

புதன் 6, நவம்பர் 2024 5:07:30 PM (IST)



அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா - அமெரிக்கா இடையேயான விரிவான, உலகளாவிய, உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று (நவ.6) எக்ஸ் தளத்தில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், "வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு எனது நண்பர் டொனால்ட் ட்ரம்புக்கு (@realDonaldTrump) மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது முந்தைய பதவிக்காலத்தின் சிறப்புகளை நீங்கள் மீண்டும் செயல்படுத்தும்போது, இந்தியா - அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய, உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நான் எதிர்பார்க்கிறேன். நமது மக்களின் முன்னேற்றத்துக்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் 276; கமலா 219 - அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். எலெக்டோரல் காலேஜ் (வாக்காளர் குழு) பொறுத்தவரையில் ட்ரம்ப வெற்றி பெற்றார். 270 என்ற எண்ணிக்கை தேவை என்ற நிலையில், இந்திய நேரப்படி பிற்பகல் 4 மணியளவில் அவருக்கு 276 வாக்காளர் குழு ஆதரவு கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸ் 219 பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்' (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள்.சிறிய மாகாணங்களில் 1 முதல் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வரை வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும். அந்த வகையில், ட்ரம்ப் 276, கமலா ஹாரிஸ் 219 என்ற எண்ணிக்கையை வசப்படுத்தி உள்ளனர். ட்ரம்ப் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகிறார்.

ட்ரம்ப் வெற்றி உரை: 78 வயதான ட்ரம்ப் தனது வெற்றி உரையில், "இது அமெரிக்காவின் பொற்காலம். நாங்கள் மக்களை நிச்சயம் பெருமை கொள்ள செய்வோம். எங்களது பணி மற்றும் செயல்பாடு அப்படி இருக்கும். துணை அதிபராக தேர்வாகி உள்ள ஜேம்ஸ் டேவிட் வான்ஸுக்கு எனது வாழ்த்துகள். அவர் அந்தப் பொறுப்புக்கு சரியான தேர்வு. நாட்டின் முதல் குடிமகள் ஆகவுள்ள என் மனைவி மெலானியாவுக்கு வாழ்த்துகள்.

இந்தத் தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய எலான் மஸ்குக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு ஜீனியஸ். நாம் அவரை பாதுகாக்க வேண்டும். அது நம் பொறுப்பு. அவரைப் போலவே தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

யாரும் செய்யாததை நாங்கள் செய்வோம். ஆட்சி பொறுப்பை ஏற்றதும் வரிகளை குறைப்போம். நம் எல்லைகளை வலுவாக்குவோம். ராணுவத்துக்கு பலம் சேர்ப்போம். நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமை மற்றும் சுதந்திரத்தை அளிப்போம். நாம் இணைந்து இந்த இலக்கை அடைவோம். நாட்டின் எதிர்காலத்தை வளம் ஆக்குவோம். அதனை பாதுகாப்போம். உலகத்தின் மிக முக்கிய பணி இது. அதன் காரணமாக தான் இறைவன் எனது உயிரை காத்தார் என நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி” என அவர் பேசினார்.


மக்கள் கருத்து

americanNov 8, 2024 - 11:41:29 AM | Posted IP 162.1*****

vaalthukal trump

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory