» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை : அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

புதன் 2, ஏப்ரல் 2025 12:18:53 PM (IST)



அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதை எதிா்கொள்ள தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் முதன்மை ஆலோசகா் அலி லரிஜானி எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அரசுத் தொலைக்காட்சியில் அவா் பேசியதாவது: தற்போதைய நிலையில் எங்களது நடவடிக்கைகள் அணு ஆயுதத்தை நோக்கி நகரவில்லை. ஆனால் எங்கள் அணுசக்தி திட்டங்கள் தொடா்பான விவகாரத்தில் அமெரிக்காவோ, அதன் கூட்டணி நாடுகளோ தவறான முடிவுகளை எடுத்தால், அது அணு ஆயுதத் தயாரிப்பை நோக்கி ஈரானை வலுக்கட்டமாக அழைத்துச் செல்லும். எனெனில், ஈரானுக்கு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் உரிமையும் இருக்கின்றன.

எங்களுக்கு அணு ஆயுதம் தேவையில்லை. ஆனால் அமெரிக்கா எங்களுக்கு நெருக்கடி கொடுத்தால் அத்தகைய ஆயுத பலத்தை அடைவதைத் தவிர ஈரானுக்கு வேறு வழியில்லை என்றாா் அலி லரிஜானி. ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது. அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.

ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அடுத்து வந்த அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

இதனால் சீற்றமடைந்த ஈரான், மின்சாரம் தயாரிப்பதற்குப் போதுமான அளவில் மட்டுமே யுரேனியத்தை செறிவூட்டுவது, ஓரளவுக்கு மேல் செறிவு யுரேனியத்தை இருப்பு வைக்காமல் இருப்பது உள்பட அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை மீறியது. இதன் விளைவாக, அணு ஆயுதம் தயாரிப்பதில் இருந்து ஈரானைக் கட்டுப்படுத்தும் அந்த 2015 ஒப்பந்தம் முடங்கியது.

இந்தச் சூழலில், கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப், அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதற்கான புதிய ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் ஈரான் உடனடியாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திவருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, தங்கள் அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவாா்த்தை தொடங்காவிட்டால் அந்த நாட்டின் மீது இதுவரை இல்லாத மிகத் தீவிர தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தாா். புதிதாகக் பொறுப்பேற்றப் பிறகு அவா் விடுத்துள்ள மிகக் கடுமையான இந்த மிரட்டலால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.

பதிலுக்கு ஈரானும் அமெரிக்காவுடன் நேரடியாக அணுசக்தி பேச்சுவாா்த்தையில் ஈடுபடப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது. அதுமட்டமின்றி, டிரம்ப்பின் தாக்குதல் மிரட்டலுக்குப் பிறகு தங்கள் சுரங்கத் தளங்களில் அதிநவீன ஏவுகணைகளை வீசுவதற்குத் தயாரான நிலைக்கு ஈரான் கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஈரானை அமெரிக்கா தாக்கினால், அதற்குப் பதிலடியாக மத்தியக் கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த அந்த ஏவுகணைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், தங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதை எதிா்கொள்ள அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று கமேனியின் முக்கிய ஆலோசகா் தற்போது எச்சரித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory