» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வெனிசுலாவில் வரலாறு காணாத இரட்டை நிலநடுக்கம்: 164 பேர் பலி, நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம்!
வெள்ளி 26, ஜூன் 2026 8:52:06 AM (IST)

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பேரழிவின் தீவிரம் காரணமாக அந்நாட்டில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 7 மணியளவில், வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கின. இவை ரிக்டர் அளவுகோலில் முறையே 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவாகின. தலைநகர் காரகாசில் இருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள லா குவைரா நகரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த அதிர்வுகளால் காரகாஸ் மற்றும் லா குவைரா பகுதிகளில் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளும் வணிக வளாகங்களும் இடிந்து தரைமட்டமாகின. நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையமான மைகுயெட்டியா விமான நிலையம் சேதமடைந்து மூடப்பட்டுள்ளது. சாலைகள் இரண்டாகப் பிளந்ததால் வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கின. ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டக்கூடும் என அமெரிக்கப் புவியியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தேசிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி, மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.
சர்வதேச நாடுகள் உதவி:
வெனிசுலாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணை மந்திரி கிறிஸ்டோபர் லண்டாவ் தெரிவித்துள்ளார். மேலும் அண்டை நாடுகளான பிரேசில், எல் சல்வாடார், கியூபா, டொமினிகன் குடியரசு உள்ளிட்டவை உடனடியாகப் பேரிடர்கால மீட்புக் குழுக்களை அனுப்பி வைத்துள்ளன.
இந்தியப் பிரதமர் மோடி இரங்கல்:
வெனிசுலா நிலநடுக்க பேரழிவிற்குப் பிரதமர் மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில், "வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்க பேரழிவைக் கண்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன். இந்திய மக்கள் சார்பாகப் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கட்டான சூழலில் வெனிசுலாவுடன் இந்தியா துணை நிற்கும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானிலும் நிலநடுக்கம்:
இதேபோல் ஜப்பானின் வடக்குப்பகுதியிலுள்ள இவாத்தே நகருக்கு அருகில் 44 கி.மீ. ஆழத்தில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அதிர்வுகள் தலைநகர் டோக்கியோ வரை உணரப்பட்டன. எனினும், அங்குப் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை மற்றும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கையாக விரைவு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, சில பள்ளிகள் மூடப்பட்டன. அங்குள்ள அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:23:24 AM (IST)

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:01:50 PM (IST)

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை : அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:31:18 AM (IST)

நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளப்பெருக்கு: 1,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:00:38 AM (IST)

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)

எச்-1பி விசா கட்டணம் 98 லட்சமாக அதிகரிக்கத் திட்டம்: அமெரிக்க அதிபருக்குப் பரிந்துரை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:09:21 PM (IST)


