» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் கோலாகலம்

செவ்வாய் 7, நவம்பர் 2023 5:33:54 PM (IST)



தென்காசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாத சுவாமி கோவிலில்  ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. 

தென்காசியில் பிரசித்தி பெற்ற உலகம்மன் சமேத காசி விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முன்பு தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டிய மன்னர் சிவபெருமானை வழிபட காசிக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தார். ஒருநாள் மன்னர்  கனவில் தோன்றிய இறைவன், வடக்கே உள்ள காசிக்கு வருதற்கு பதிலாக இவ்விடத்திலேயே தட்சிண காசியில் கோவில்  அமைத்து வழிபடும் படி கூறினார். 

அதாவது எறும்பு ஊர்ந்து செல்லும் வழியாக சென்று அது எங்கு முடிகிறதோ அங்கு கோவில் கட்டும் படி இறைவன் கூறுகிறார். அதன்படி பராக்கிரம பாண்டிய மன்னரும் எறும்பு சென்ற வழியே சென்ற போது, அது சிற்றாற்றங்கரையில் செண்பக வனத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த இடத்தில் புற்றில் சுயம்புலிங்கம் கண்டு கோவில் கட்டி வழிபட்டார். அக்கோவில் தான் இப்போதுள்ள உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் ஆகும்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 30ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்று வருகிறது.

தினமும் இரவு மண்டகப்படிதாரர் தீபாராதனை மற்றும் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. காலையில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு உலகம்மன் எழுந்தருளல் நடைபெற்றது. பின்னர் மேளதாளம் முழங்க, பஞ்ச வாத்தியங்கள் இசைக்க பக்தர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தேரோட்டத்தை துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், நகராட்சி தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, மதிமுக மாவட்ட அவைத்தலைவர் வெங்கடேசன், நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர் மற்றும் திரளானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளையும் சுற்றி நிலை வந்து சேர்ந்தது.வரும் 9ம் தேதி மாலையில் தெற்கு மாசி வீதியில் தபசு காட்சி, இரவு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory