» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்த 48 கவுன்சிலர்கள்: நெல்லையில் பரபரப்பு!

புதன் 8, நவம்பர் 2023 3:48:49 PM (IST)

நெல்லை மாநகராட்சி கூட்டத்தை ஆளுங்கட்சி கவுன்சிலர்களே புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு கூட்டத்திற்கான பொருள் குறித்த தகவல் 55 கவுன்சிலர்களுக்கும் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு மாநகராட்சி ராஜாஜி மண்டபத்தில் உள்ள கூட்டரங்கிற்கு மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் வந்தார். மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் கூட்டரங்கின் அருகே உள்ள அறையில் காத்திருந்தனர்.

அரை மணிநேரத்திற்கு பின்பு தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், சீதா பாலன், பிரபா சங்கரி, அ.தி.மு.க கவுன்சிலர்கள் முத்துலெட்சுமி, காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர். தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மற்ற 48 கவுன்சிலர்கள் மாநகராட்சிக்கு வந்த நிலையில் கூட்டரங்கிற்கு செல்லாமல் கூட்டத்தை புறக்கணித்தனர்.

கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்ததால் கூட்ட அரங்கில் சுமார் 40 நிமிடம் வரை காத்திருந்த கமிஷனர் பின்பு வெளியேறினார். அவர் தனது அறைக்கு சென்று விட்டார். இதற்கிடையே கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள் அனைவரும் மாநகராட்சி கமிஷனர் அறையின் அருகே உள்ள மற்றொரு சிறு கூட்டரங்கில் அமர்ந்திருந்தனர்.இதையடுத்து மேயர் மற்றும் துணை மேயர், கவுன்சிலர்கள் திரண்டு இருந்த கூட்ட அரங்கிற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர்கள், மேயர், அதிகாரிகள் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நெல்லை வந்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு ஆகியோர் கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் சமாதானம் செய்து வைத்துவிட்டு சென்றனர்.

அதன்பின்னர் இன்று முதல் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே கூட்டத்திற்கு வராமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் மாமன்ற அலுவலகத்தில் உள்ள மற்றொரு கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory