» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நிதி நிறுவனத்தில் ரூ.7¼ கோடி நகை முறைகேடு : ஊழியர்களிடம் 2-வது நாளாக விசாரணை!

செவ்வாய் 21, நவம்பர் 2023 5:51:28 PM (IST)

திருநெல்வேலி நிதி நிறுவனத்தில் ரூ.7¼ கோடி நகை முறைகேடு தொடர்பாக ஊழியர்கள் உள்பட 5 பேரிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. 

கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நிதி நிறுவனத்தின் கிளை நெல்லை மாவட்டம் களக்காடு அண்ணா சாலையில் உள்ளது. இங்கு மேலாளர் மற்றும் நிதி நிறுவன ஊழியர்களாக களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள், களக்காடு கிளையில் கணக்கு விபரங்கள் மற்றும் நகை இருப்பு குறித்த ஆய்வு பணியை மேற்கொண்டனர். அப்போது அங்கு வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை லாக்கரில் இருந்து எடுத்து அதே போல் போலியாக நகைகளை தயாரித்து உள்ளே வைத்துவிட்டு ஒரிஜினல் தங்க நகைகளை நிதிநிறுவன ஊழியர்கள் எடுத்து கொண்டதும், அதனை வேறு ஒரு அடகு கடை நடத்திவரும் நபரின் மூலமாக விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இவ்வாறாக சுமார் ரூ.7¼ கோடி வரையில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைமை அலுவலக அதிகாரிகள், நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தனுசியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் நேற்று களக்காட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 2 ஊழியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தெரிந்த மற்றொரு அடகு கடை நடத்தி வரும் கணவன்-மனைவி உள்பட மேலும் 3 பேரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் தொடர்புடைய 5 பேரையும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து நேற்று நள்ளிரவு வரையிலும் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இன்றும் 2-வது நாளாக அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் முக்கிய நபர் ஒருவரை போலீசார் பிடித்து வந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது அந்த நபர் தப்பி ஓடி விட்டதாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory