» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இந்தியாவை உலக அரங்கில் முன்னேற்றியவர் பிரதமர் மோடி: டி.டி.வி. தினகரன் பேச்சு

புதன் 3, ஏப்ரல் 2024 8:37:28 AM (IST)"இந்தியாவை உலக அரங்கில் முன்னேற்றியவர் பிரதமர் மோடி” என்று தேர்தல் பரப்புரையில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார். 

தென்காசி தொகுதியில் பா.ஜனதா சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, அவர் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமராக மோடி வருவது உறுதி. இந்தியாவின் பாதுகாப்பிற்கு அரணாக இருப்பது பா.ஜனதா மட்டுமே. மோடி பிரதமர் ஆன பின்பு தான் இந்தியாவின் பண வீக்கம் பாதியாக குறைந்தது. கொரோனா காலத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளே சிக்கலில் தவித்தபோது இந்தியா மட்டுமே எந்த பாதிப்பையும் அடையவில்லை. இந்தியாவை உலக அரங்கில் முன்னேற்றியவர் பிரதமர் மோடி தான்.

அ.தி.மு.க., தி.மு.க.வினால் பிரதமர் வேட்பாளர் யார் என்பதைக்கூட சொல்ல முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு அ.தி.மு.க. வாக்குகள் சென்று விடக்கூடாது என்பதற்காக, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தி தி.மு.க.விற்கு மறைமுக ஆதரவை அளித்துள்ளார். எனவே, ஜான் பாண்டியனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக குற்றாலத்தில் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் தான் போட்டி உள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்ததற்கு மூல காரணம் அப்போதைய காங்கிரஸ் கட்சியும், கருணாநிதி தலைமையிலான தி.மு.க. கட்சியும் தான். அ.தி.மு.க. இந்த தேர்தலில் தி.மு.க.வுடன் கள்ளக்கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 

எங்களைப் பொறுத்தமட்டில் தீய சக்தி தி.மு.க. தான் எங்களுக்கு எதிரி. ஜெயலலிதாவின் கட்சியை கபாளீகரம் செய்து வைத்திருப்பவர்களிடம் இருந்து மீட்பது தான் எங்களது நிலைப்பாடு. சீமானுக்கு சின்னம் கொடுக்க கூடாது என்று எனக்கு எந்த வகையிலும் எண்ணம் கிடையாது. அதே நேரத்தில் அவருக்கு சின்னம் கொடுக்காதது எனக்கு மகிழ்ச்சி இல்லை. நாங்கள் சரண் அடைந்து விட்டோம் என்று கூறுகிறார். ஒரு கட்சியுடன் இணைந்துள்ளோம். எனக்கு எந்த நிர்பந்தமும் யாரும் கொடுக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வேட்பாளர் ஜான் பாண்டியன், மண்டல செயலாளர் மாணிக்கராஜா ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பகுதியில் திறந்த வேனில் நின்று வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory