» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : வாலிபர் கைது!

திங்கள் 17, ஜூன் 2024 9:10:53 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் பழம்பெரும் ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இங்கிருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கு இடையேயும், மும்பை, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பிற மாநில முக்கிய நகரங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர நெல்லையில் இருந்து திருச்செந்தூர், செங்கோட்டை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கும் பாசஞ்சர் ரயில்களும் இயக்கப்படுகின்றன. 

இந்த நிலையில் சென்னை காவல்கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் 2.35 மணி முதல் 2.51 மணி வரையிலும் ஒரே எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த எண்ணில் பேசிய நபர், ‘‘நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த சிலர் வெடிகுண்டுகளை வைத்துள்ளனர். அது சற்று நேரத்தில் வெடிக்க போகிறது’’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக நெல்லை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை மற்றும் சந்திப்பு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய்கள், மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு தீவிர சோதனை நடத்தினர். ரயில் நிலைய பிளாட்பாரங்கள், பொருட்கள் வைக்கும் அறை, பயணிகள் தங்கும் அறைகளில் சோதனை மேற்கொண்டனர். பயணிகள் உடைமைகளையும் சோதனை செய்தனர். ரயில்வே தண்டவாளங்கள் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு இருக்கிறா? என சோதனை செய்தனர்.

இதற்கிடையே காவல்கட்டுப்பாட்டு அறைக்கு அந்த நபர் பேசிய தொலைபேசி எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், அந்த எண் சிவபெருமாள் என்பவர் பெயரில் இருப்பதும், நெல்லை அருகே தாழையூத்து பகுதியில் உள்ள முகவரியில் சிம்கார்டு வாங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து நெல்லை சந்திப்பு உதவி போலீஸ் கமிஷனர் வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு அந்த நபர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வண்ணார்பேட்டைக்கு வீடுமாறிச் சென்று விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் வண்ணார்பேட்டை குறவஞ்சி நகரில் உள்ள வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. ஆனால் அவரின் மனைவி கொக்கிரகுளத்தில் உள்ள ஒரு கடையில் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்தார் என்ற தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனது மனைவியை பார்க்க அந்த நபர் வரலாம் என்று நினைத்த போலீசார் கொக்கிரகுளத்திற்கு சென்றனர். அங்கு அந்த நபர் சாலையோரம் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர் கருப்பசாமி மகன் தொழிலாளியான சிவபெருமாள் (40) என்பதும், மதுபோதையில் மதியம் டவுன் நயினார்குளம் மார்க்கெட் பகுதியில் இருந்தபோது, நெல்லை சந்திப்பு ரயில்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை சந்திப்பு உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு துணை கமிஷனர் கீதா, சிவபெருமாளிடம் விசாரணை நடத்தினார்.

இதனையடுத்து நெல்லை தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபெருமாளை கைது செய்தனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory