» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் பல மகத்தான திட்டங்கள் வரப்போகிறது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திங்கள் 22, டிசம்பர் 2025 8:28:25 AM (IST)



‘திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் பல மகத்தான  திட்டங்கள் வரப்போகிறது’ என்று நெல்லையில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நேற்று அரசு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சுகுமார் வரவேற்று பேசினார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நெல்லை மாவட்டத்தில் ரூ.694 கோடியில் முடிவுற்ற 33 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, 11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

மேலும் ரூ.101½ கோடி மதிப்பில் 45,477 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: இந்திய விடுதலை போராட்டத்திலும், தமிழ்நாட்டின் வரலாற்றிலும் பொன்னால் பொறிக்கத்தக்க தியாகங்களை, தியாகிகளை தந்த மண் இந்த நெல்லை மண், அப்படிப்பட்ட இந்த நெல்லை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நெல்லையின் அடையாளமாக விளங்கும் நெல்லையப்பர் கோவிலை 7-ம் நூற்றாண்டில் நின்ற சீர்நெடுமாறன் கட்டினார். அந்த கோவிலை புதுப்பித்து திருப்பணிகள் செய்தவர் கருணாநிதி. 1991-ம் ஆண்டு நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் தீவிபத்தில் எரிந்து போனது. கடந்த பிப்ரவரி மாதம் நெல்லைக்கு நான் வந்தபோது அந்த வெள்ளித்தேர் ஓடும் என்று அறிவித்தேன். அதன்படி இந்த தேர் வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து ஓடும்.

பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த பெருமிதத்தில் உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன். பொருநை, தமிழரின் பெருமையாக உள்ளது.இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, இனிமேல் தமிழ் நிலத்தில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நமது வாதத்திற்கான சான்றுகளை அறிவியல் பூர்வமாக நிறுவி இருக்கிறோம்.

கீழடி தொடங்கி பல வரலாற்று இடங்களில் நாம் மேற்கொள்ளும் அகழாய்வுகளுக்கு மத்திய பா.ஜனதா அரசு எப்படியெல்லாம் தடை போடுகிறார்கள் என்று தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழர்களின் வரலாற்று தொன்மையை நிரூபிக்கும் ஆய்வுகள் எதுவும் நடைபெறக்கூடாது என்பதுதான் அவர்களது எண்ணமாக உள்ளது. மீறி நடந்தாலும், அந்த ஆய்வு முடிவுகள் வெளியே வந்து விடக்கூடாது என்ற எண்ணம் கொண்ட, தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் வெறுப்போடு செயல்படுபவர்களை எதிர்த்துதான் நாம் உறுதியுடன் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இல்லாத சரசுவதி நதி நாகரிகத்தை தேடி அலைபவர்களுக்கு, கண் முன்பே நாம் வெளியிடும் ஆய்வுகள் தெரிவதில்லை. அதற்காக நாம் சோர்ந்து போய், நமது கடமையில் இருந்து பின் வாங்க முடியுமா? நம்முடைய வரலாற்றை விட்டு கொடுக்க முடியுமா?, நிச்சயம் முடியாது. ஈராயிரம் ஆண்டு கால சண்டை இது, இதில் நாம் தோல்வி அடைந்து விடமாட்டோம். அடுக்கடுக்கான சான்றுகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறோம்.

அதற்காகத்தான் அருங்காட்சியகங்களை அமைத்து வருகிறோம். நெல்லையில் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்திருக்கிறேன். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக, தமிழினத்தின் தலைமை இயக்கமான தி.மு.க. தலைவராக மட்டுமல்லாமல், ஒரு தமிழராகவும் நான் பெருமைப்படுகிறேன். இந்த அருங்காட்சியகத்தை நீங்கள் எல்லோரும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும்.

மிகச்சிறப்பாக பொருநை அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கட்டி எழுப்பி உள்ள அமைச்சர் எ.வ.வேலு, துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள கே.என்.நேரு கையில் பெரிய துறை இருக்கிறது. பெரும்பாலான திட்டங்களை அவரே உங்களுக்கு கொண்டு வந்து விடுவார்.

திராவிட மாடல் அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு. அதற்கான சாட்சிதான் கீழடியும், பொருநை அருங்காட்சியகமும். நம்மை விமர்சனம் செய்பவர்கள், தமிழ் என்றாலே தி.மு.க.தான், வேறு யாராலும் இவ்வாறு யோசிக்க முடியாது என்று மனதிற்குள் நிச்சயம் நம்மை பாராட்டிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் இதற்கு நேர்மாறாக, மக்கள் விரோத ஆட்சியை மத்திய அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய கிராமங்களின் உயிர் நாடியாக இருந்து, பல கோடி ஏழை மக்களின் வறுமையை போக்கிய மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை இப்போது பா.ஜனதா அரசு திட்டமிட்டு முடக்கி இருக்கிறது. மகாத்மா காந்தி பெயரையே நீக்கி, பெரும்பாலான இந்திய மக்களுக்கு புரியாத இந்தி பெயரை வைத்திருக்கிறார்கள். மதச்சார்பின்மை, ஒற்றுமை என்ற சொற்கள் பா.ஜனதாவுக்கு பிடிக்காது.

அவற்றை வலியுறுத்திய காந்தியையும் அவர்களுக்கு பிடிக்காது. பெயரை நீக்கியது மட்டுமல்லாமல், 100 நாள் வேலை திட்டத்தின் உண்மையான நோக்கத்தையே அழித்துவிட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டத்தை பல்வேறு கோணங்களில் கெடுத்தார்கள். ஆட்கள், வேலை நாட்களை குறைத்தார்கள். சரியாக சம்பளம் தரவில்லை, சரியாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

மத்திய அரசு தரவேண்டிய நிதியை கூட மாநில அரசான நாம்தான் வழங்கினோம். இப்போது மொத்தமாக மூடுவிழா நடத்தி விட்டார்கள். இனிமேல் மாநில அரசு 40 சதவீதம் நிதி தரவேண்டுமாம். ஏற்கனவே நிதி நெருக்கடியை உருவாக்கி, நம்மை முடக்க பார்ப்பவர்கள், தற்போது கூடுதல் சுமையை நம்முடைய தலையில் கட்டுகிறார்கள். அறுவடை காலங்களில் 60 நாட்கள் வேலை எதுவும் வழங்கக்கூடாது என்று மாற்றம் செய்து இருக்கிறார்கள்.

இதனால் வேளாண் பணி செய்தவர்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கிறார்கள். மொத்தத்தில் ஏழைகளுக்கும், மத்திய பா.ஜனதா அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கைகழுவி இருக்கிறார்கள். நாடாளுமன்றத்திலும் இதைப்பற்றி முறையாக விவாதிக்காமல் நிறுத்தி விட்டார்கள்.

அதனால்தான் அரசியல் இயக்கங்கள், செயற்பாட்டாளர்கள், உலக புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்கள், நோபல் பரிசு பெற்ற வல்லுனர்கள் என பலரும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்கள். இது ஒரு வரலாற்று தவறு என்று எச்சரிக்கை மணிகளை ஒலித்திருக்கிறார்கள்.

100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றான புதிய சட்டத்தை மக்கள் சக்தி துணையுடன் திரும்ப பெற வைப்போம். இது எங்களுடைய லட்சியம். ஜி.எஸ்.டி., அடாவடி கவர்னர், மெட்ரோ நிராகரிப்பு என்று மத்திய அரசு எத்தனை நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், போராடி அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக நாம் உயர்த்தி காட்டிக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவிலேயே நம்பர்-1 மாநிலம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நம்மை எதிர்ப்பவர்கள் கூட மறுக்க முடியாத அளவுக்கு வெற்றி என்பதுதான் திராவிட மாடலின் கெத்து. அடுத்து அமைய போவதும் நம்முடைய ஆட்சிதான், உறுதியாக சொல்கிறேன். ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியில் இன்னும் பல மகத்தான திட்டங்கள் வரப்போகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இதுவரை 1.13 கோடி சகோதரிகளுக்கு வழங்கி கொண்டிருந்தோம். இந்த மாதத்தில் இருந்து கூடுதலாக 16 லட்சம் பேருக்கு வழங்குகிறோம்.இந்த திட்டத்தை இந்தியாவின் பல மாநிலங்கள் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள். பா.ஜனதா ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் வழங்கி விட்டு, கொடுத்ததை திரும்ப கேட்கிறார்களாம்.

ஆனால் நாம் கூடுதலாக வழங்கிக்கொண்டு வருகிறோம். உங்களுடைய அசைக்க முடியாத ஆதரவுடன் இது என்றும் தொடரும். எத்தனை தடைகள் வந்தாலும் திராவிட மாடலால் தமிழ்நாடு வெல்லும், தமிழ்நாடு வளரும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் கே.என்.நேரு நினைவு பரிசு வழங்கினார்.

விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதாஜீவன், ராஜ கண்ணப்பன், மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், எம்.பி.க்கள் கனிமொழி, ராபர்ட் புரூஸ், ராணி ஸ்ரீகுமார், நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் டி.பி.எம்.மைதீன்கான், சுரேஷ்ராஜன், பூங்கோதை, மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் துரை நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory