» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் குரூப் 1 தேர்வில் 2,524 பேர் ஆப்சென்ட் - ஆட்சியர் தகவல்!
சனி 13, ஜூலை 2024 4:24:03 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் குரூப் 1 தேர்வினை 5075 பேர் எழுதினர். 2,524 பேர் வருகை புரியவில்லை என்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு I (குரூப் I) நடைபெற்றதை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருநெல்வேலி மாவட்டத்தில், குரூப் -I பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற்றது.
தேர்வு நாளன்று தேர்வர்கள் தேர்வு எழுத வசதியாக தேர்வு மையத்திற்கு வருவதற்கும், தேர்வு முடிந்த பின் செல்வதற்கும் போதிய பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள 27 தேர்வு மையங்களில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-I (குரூப் -I) பதவிகளுக்கான முதல் நிலை தேர்வில் 7,598 தேர்வர்களில் 5075 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 2,524 தேர்வர்கள் வருகை புரியவில்லை.
மேலும் அனைத்து மையங்களிலும் தேர்வின் நடவடிக்கைகளை வீடியோ மூலம் பதிவு செய்யவும், தேர்வு நடைபெறும் கல்வி நிலையத்திற்கு காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு வழங்கவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்..