» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் 310.45 மி.மீ மழை பெய்துள்ளது: ஆட்சியர் தகவல்
வெள்ளி 26, டிசம்பர் 2025 5:24:20 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் வளமையான மழையளவான 208.20 மி.மீ-ஐ விட 49.11 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது என்று ஆட்சியர் சுகுமார் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் தெரிவிக்கையில், "திருநெல்வேலி மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் 310.45 மி.மீ மழை பெய்துள்ளது, இது மாவட்டத்தின் வளமையான மழையளவான 208.20 மி.மீ-ஐ விட 49.11 சதவிகிதம் அதிகமாகும். மேலும் நடப்பு டிசம்பர் மாதத்தில் 23.12.2025-ஆம் தேதி வரை 35.30 மி.மீ மழை பெய்துள்ளது.
இது இம்மாத வளமான மழையளவான 208.20 மி.மீ-ஐ விட 83 சதவிகிதம் குறைவாகும். மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டு நவம்பர் மாதம் வரையில் 33756 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்கள் மற்றும் 10337 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 2981 ஹெக்டேர் நெற்பயிர், 1052 ஹெக்டேர் பயறு வகைப்பயிர்கள் மற்றும் 107 ஹெக்டேர் வாழைப்பயிர்களின் பரப்பு நடப்பாண்டில் அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த கனமழையினால் 63.97 ஹெக்டேர் பரப்பில் நெற்பயிர்கள் மற்றும் 99.864 ஹெக்டேர் பரப்பில் வாழைப் பயிர்களும் சேதம் அடைந்தன. பயிர் சேத விபரங்கள் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறையினரால் கூட்டுபுல தணிக்கை செய்து அரசு தலைமையிடத்திற்கு அனுப்பப்பட்டு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 09.02.2025 முதல் விவசாயிகளின் நில உடைமை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தனிக்குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 22.12.2025-ம் தேதி வரை 28822 பி.எம்.கிசான் மற்றும் 13857 இதர விவசாயிகளின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 22வது தவணை பிரதம மந்திரி கௌரவத் தொகை பெறுவதற்கும், பயிர் காப்பீட்டுத் தொகை பெறுவதற்கும் கண்டிப்பாக விவசாய அடையாள எண் தேவை. எனவே, வலைதளத்தில் இதுநாள் வரை பதிவுசெய்யாத 6383 விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
வருகிற 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய நாட்களில் திருவண்ணாமலை மாவட்டம், திருகோவிலூர் சாலையில் அமைந்துள்ள அரசு பள்ளிக்கு எதிர்புறம் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண் கண்காட்சி, முதலமைச்சரின் உழவர்நல சேவை மையங்கள் தொடக்க விழா மற்றும் வேளாண் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
அவ்விழாவில் அதிக அளவில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. நடப்பு நிதியாண்டு 2025-26-ல் 23.12.2025 வரை பயிர் கடனாக உழவர் கடன் அட்டை மூலம் ரூ.9033 கோடி வழங்கப்பட்டுள்ளது மற்றும் கால்நடை வளர்க்கும் 4136 விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை மூலம் ரூ.3265.75 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விவசாயிகளுக்கு தங்குதடையின்றி கடன் உதவி கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உளுந்து பயிருக்கு 8221.50 எக்டர் பரப்பிற்கு 25895 விண்ணப்பங்களும், பாசிப்பயறு பயிருக்கு 48.61 பரப்பிற்கு 143 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிசான பருவ நெல் பயிருக்கு 694.22 எக்டர் பரப்பிற்கு 3091 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மக்காச்சோளப் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய 30.12.2025 கடைசி நாளாகும். கோடை பருவ நெற் பயிர் செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய 31.01.2026 தேதி கடைசி நாளாகும். தோட்டக்கலை பயிர்களான வாழை பயிருக்கு 28.02.2026 தேதி மற்றும் வெண்டை பயிருக்கு 15.02.2026 தேதி பயிர் காப்பீடு செய்ய கடைசி நாட்களாகும்.
மக்காச்சோள பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.333/-ம், தோட்டக்கலை பயிர்களான வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1792/-ம், வெண்டை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.359/-ம் பிரீமியத் தொகையாக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பூர்த்தி செய்து கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பத்துடன், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பருவ அடங்கல் அல்லது மின்னணு பயிர் கணக்கெடுப்பின் வாயிலாக உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலரால் வழங்கப்பட்ட அடங்கல், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சிட்டா/ பட்டா நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பதிவு செய்ய வேண்டும்.
விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டம் தொடர்பான தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணான '14447"I தொடர்பு கொள்ளலாம். மேலும் விரிவான விபரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுவரை 34502 பயனாளிகள் பதிவு செய்து பயன் பெற தகுதியுடையவராக உள்ளனர். இவற்றில் e-KYC பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள 1437 பயனாளிகளுக்கு e-KYC செய்து கொடுத்திடவும், வங்கிக்கணக்குடன் ஆதார் எண் இணைப்பு செய்யப்படாமல் உள்ள 955 பயனாளிகளை கண்டறிந்து வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திடும் பணியும் வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்களால் இம்மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகிட பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் அனைத்துத் துறைகளின் வட்டார அலுவலர்கள் சார்புத்துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோர்களால், உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களிலேயே நேரடியாக சந்தித்து அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதோடு, வேளாண்மையினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களையும், வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சார்புத்துறைகளின் திட்டங்களையும் எடுத்துக் கூறி பயன்பெறும் வகையில், மாதம் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இம்முகாமில் நவீன வேளாண் தொழில் நுட்பங்கள் உழவர் நலன் சார்ந்த இதர அரசுத் திட்டங்கள் பற்றிய தகவல்கள், உயிர்ம வேளாண்மை சாகுபடி குறித்த வழிகாட்டுதல்கள், உயிர்ம வேளாண்மைச் சான்று பெறுவதற்கான வழிமுறைகள், மதிப்புக் கூட்டுப் பொருட்களை தயாரிப்பதற்கான வழிமுறைகள், அவற்றை சந்தைப்படுத்துவற்கான ஆலோசனைகள்/ வழிகாட்டுதல்கள் வழங்குதல் முதலிய சேவைகள் வழங்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டார வாரியாக வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையில் மொத்தம் 261 வருவாய் கிராமங்களில் உழவரைத்தேடி வேளாண்மை- உழவர் நலத்துறை முகாம் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாமில் துறை வாரியாக 184 மனுக்கள் பெறப்பட்டு, 166 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 18 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது.
நவம்பர் 2025-ம் மாதத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 123 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றுள் வேளாண்மை சார்ந்த மனுக்கள் 79 எண்களும், வேளாண்மை சாராத மனுக்கள் 44 எண்களும் பெறப்பட்டு, மனுக்களுக்குரிய பதில்கள் சம்மந்தப்பட்ட துறை மூலம் விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருகில் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கிள்ளிகுளம் மற்றும் எஸ்.தங்கபழம் வேளாண்மை கல்லூரி வாசுதேவநல்லூர் ஆகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவியர்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரம் மில்லா குளிர் சேமிப்பு அறை, காற்று தடுப்பு மற்றும் காற்று தடுப்பு வரிசை அமைப்பு, செங்குத்து விவசாயம், பசுமைகுடில், பண்ணைமுறை போன்ற செயல்முறை மாதிரி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து வேளாண்மைத் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் ஆகிய திட்டத்தின் கீழ் இடுபொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் வன கோட்ட அலுவலர் எல்.ஸ்ரீகாந்த், மாவட்ட வன அலுவலர் இளங்கோ, இணை இயக்குநர் வேளாண்மை பூவண்ணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை (பொ) கற்பக ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:54:01 AM (IST)

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:36:34 AM (IST)

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

