» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை: மனைவி பிரிந்து சென்றதால் சோகம்!
வெள்ளி 27, செப்டம்பர் 2024 8:38:33 AM (IST)
வள்ளியூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால், திருமண நாளில் வீட்டு மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஜோசப் ஜெரோம் என்ற கண்ணன் (38), எலக்ட்ரீசியன். இவருக்கும், வள்ளியூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவி பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும், அவரது மனைவிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த ஜோசப் ஜெரோம் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். அவர் நேற்று காலையில் வீட்டின் மாடியில் இருந்து குதித்தார். சத்தம் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு ஜோசப் ஜெரோம் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜோசப் ஜெரோம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து வள்ளியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஜோசப் ஜெரோம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட ஜோசப் ஜெரோமுக்கு நேற்று திருமணம் நாள் என்பது குறிப்பித்தக்கது. வள்ளியூர் அருகே திருமண நாளில் மாடியில் இருந்து குதித்து எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.