» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது பணத்தை திருடிய பெண் போலீஸ் கைது

புதன் 27, நவம்பர் 2024 8:32:40 AM (IST)



சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணியபோது பணத்தை திருடிய பெண் போலீஸ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் 20-ந்தேதிக்கு மேல் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் கோவிலில் துணை ஆணையர் கோமதி முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, 4 பெண்கள் காணிக்கை பணத்தை நைசாக திருடியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த கோவில் நிர்வாகம் சார்பில் அங்குள்ள புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, அங்கிருந்த 4 பெண்களை பிடித்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பெண் போலீஸ் உள்பட 4 பேர் என்ற பரபரப்பு தகவல் வெளியானது.

அதாவது, சங்கரன்கோவில் அருகே உள்ள கோ.மருதப்பபுரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ்வரி (42), முத்துலட்சுமி (65), மல்லிகா (31), மாரியம்மாள் (40) ஆகியோர் என்பதும், இவர்கள் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து உண்டியல் காணிக்கை பணம் ரூ.17,710-ஐ திருடியதும் தெரியவந்தது. மேலும் மகேஷ்வரி தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணியாற்றும் அதிர்ச்சி தகவலும் வெளியானது.

இதையடுத்து 4 பேரும் சங்கரன்கோவில் டவுன் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் வழக்குப்பதிந்து மகேஷ்வரி உள்பட 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து இவர்கள் 4 பேரும் சேர்ந்து வேறு எங்கேயும் இதுபோன்று கைவரிசையில் ஈடுபட்டு உள்ளார்களா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கோவிலில் ஏற்கனவே உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது பணம் திருடப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் நடந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சங்கரநாராயண சுவாமி கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய பெண் போலீஸ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory