» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைக் பள்ளத்தில் பாய்ந்து விபத்து: அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலி
வெள்ளி 6, டிசம்பர் 2024 8:17:42 AM (IST)
நெல்லை அருகே மோட்டார் பைக்பள்ளத்தில் பாய்ந்து அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி மகன் துரைராஜ் (50). இவர் தற்போது குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் ஜான்குமார் (57). அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் அச்சம்பாடு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்திருந்தனர்.
நேற்று காலை மீண்டும் குளச்சலுக்கு புறப்பட்டனர். மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அம்பலம் சாலையில் உள்ள ஒரு திருப்பத்தில் திரும்பும்போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இதனால் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் துரைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த ஜான்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாலையில் ஜான்குமாரும் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.