» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கடையம் அருகே தலை துண்டித்து விவசாயி கொடூரக் கொலை: போலீசார் தீவிர விசாரணை
ஞாயிறு 22, டிசம்பர் 2024 9:29:27 AM (IST)
கடையம் அருகே தலை துண்டித்து விவசாயி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர் அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் அருள். இவருடைய மகன் சொக்கன் என்ற இருதயராஜ் (45). விவசாயியான இவர் ஆதரியானூர் அச்சங்குளம்- கள்ளத்திகுளம் பகுதியில் மீன் பாசி குத்தகைக்கு எடுத்து உள்ளார். இவர் இரவு நேரங்களில் குளத்தின் கரையில் காவலுக்கு இருப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவும் இருதயராஜ் காவலுக்கு இருந்தார். நள்ளிரவில் அங்கு மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் இருதயராஜிடம் தகராறு செய்தனர். மேலும் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருதயராஜை சரமாரியாக வெட்டி, அவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இதில் உடலும், தலையும் அருகருகே தனித்தனியாக கிடந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இருதயராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ஆழ்வார்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து இருதயராஜ் உடல், தலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட இருதயராஜிக்கும், சிலருக்கும் சொத்து பிரச்சினை இருந்தது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதே நேரத்தில் இருதயராஜ், மீன் பாசி குத்தகைக்கு எடுத்து இருப்பதால் இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவரை யாரேனும் மர்ம நபர்கள் கொலை செய்து இருக்கலாமா?, அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட இருதயராஜிக்கு 2 மனைவிகளும், 3 குழந்தைகளும் உள்ளனர். கடையம் அருகே தலை துண்டித்து விவசாயி கொடூரமாக கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.