» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசியில் பொதுமக்களை அச்சுறுத்திய மலை பாம்பு சிக்கியது
சனி 21, டிசம்பர் 2024 8:33:40 AM (IST)
தென்காசியில் பொதுமக்களை அச்சுறுத்திய மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.
தென்காசி கோகுலம் காலனியில் நேற்று இரவு மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் அலறடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தென்காசி தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலர் ஜெயரத்தின குமார், ஜெயபிரகாஷ் பாபு ராஜ்குமார், கார்த்தி, சுந்தர், விஸ்வநாதன் குழுவினர் விரைந்து சென்று கோகுலம் காலனியில் உள்ள புதர்களில் சல்லடை போட்டு மலைப்பாம்பை தேடினர்.
டார்ச் வெளிச்சத்தில் தேடுதல் வேட்டை நடைபெற்ற போது அடர்ந்து வளர்ந்திருந்த செடி கொடிகளுக்கு இடையே ஒன்பதடி மலைப்பாம்பு பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து சென்றனர். பிடிபட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கோகுலம் காலனியை அச்சுறுத்தி வந்த மலைப்பாம்பு பிடிபட்டதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்பகுதியில் மலைப் பாம்பு ஒன்று சிக்கியது குறிப்பிடத்தக்கது.