» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள அதிகாரிகள் ஆய்வு!
வெள்ளி 20, டிசம்பர் 2024 5:38:08 PM (IST)
நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் ஆபத்தானவை அல்ல என்று கேரள சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மருத்துவக்கழிவுகள், அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாகி வருகிறது. தமிழகத்தில், குறிப்பாகத் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திற்குக் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கனிம வளங்கள் லாரிகளில் அனுப்பப்படுகின்றன.
அதன் பின்னர் கேரளாவில் இருந்து திரும்பி வரும் லாரிகளில் கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் போன்றவை மூட்டை மூட்டையாகத் தமிழகத்தில் கொட்டப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் திருநெல்வேலி மாவட்டம் சீதப்பன்நல்லூர் அருகே உள்ள நடுக்கல்லூர், பலவூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் மூட்டை மூட்டையாகக் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
அதாவது திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ கழிவுகள் அதிகப்படியாகக் கொட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கழிவில் மருத்துவமனையின் அனுமதிச் சீட்டுகள், ரத்தக் கசிவுகள், பஞ்சுகள் மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள் பல்வேறு வகையான பொருட்கள் கழிவுகளாக கொட்டப்பட்டுள்ளன.
கேரள மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலி பகுதியில் கொட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனிடையே மருத்துவக் கழிவுகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவமனை மறுத்துள்ளது.
இந்த நிலையில் நெல்லை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது பேட்டியளித்த கேரள அதிகாரிகள், "நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் ஆபத்தானவை அல்ல. மருத்துவக் கழிவுகளில் சோதனைக்கு பயன்படுத்தப்படும் மாதிரிகளே அதிகம் உள்ளன. பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி கழிவுகளை அகற்றுவது குறித்து கேரள அரசு நடவடிக்கை எடுக்கும். இன்று அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு நாளை கேரள அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்" என்று தெரிவித்தனர்.