» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சட்டக்கல்லூரி மாணவர் குத்திக்கொலை: நெல்லை அருகே பயங்கரம்
பூவையாமகேஷ் | சனி 21, டிசம்பர் 2024 8:07:01 AM (IST)
நெல்லை அருகே பழிக்குப்பழியாக சட்டக்கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி கீழ நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் மணிகண்டன் (22). இவர் சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்றார். பின்னர் வயலில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.
கமிட்டி நடுநிலைப்பள்ளி அருகில் வந்தபோது, சேரன்மாதேவி லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த சிவராமன் மகன் மாயாண்டி (46) என்பவர் வழிமறித்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை, அவரது உறவினர்கள் மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து சேரன்மாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பழிக்குப்பழியாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோட்டராங்குளத்தில் சிவராமன் (25) என்ற வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் மணிகண்டனின் நெருங்கிய உறவினருக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டனை, கொலை செய்யப்பட்ட சிவராமனின் தாய்மாமா மாயாண்டி கத்தியால் குத்திக் கொன்றது தெரியவந்தது. இந்த பயங்கர கொலையால் சேரன்மாதேவி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தப்பி ஓடிய மாயாண்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.