» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விபத்தின் இறந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் : அரசு சார்பில மரியாதை!
புதன் 8, ஜனவரி 2025 4:29:27 PM (IST)
திருநெல்வேலியில் உடல் உறுப்புகள் தானம் செய்த வாலிபரின் உடலுக்கு அரசின் சார்பில் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா மரியாதை செலுத்தினார்.
திருநெல்வேலி மாநகராட்சி, கரையிருப்பு பகுதியை சேர்ந்த சிவன்பாண்டி அவர்களின் மகன் இசக்கிபாண்டி (36) விபத்தின் காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, அன்னாரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா , திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி பாலன் ஆகியோர் இன்று (08.01.2025) தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயர சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகத்தை கவுரவிக்கும் வகையிலும், தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையிலும் இறந்தவரின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சி, கரையிருப்பு பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி (வயது 36), இவர் கடந்த 04.01.2025 அன்று தனது மனைவியுடன் சொந்த ஊரான கரையிருப்பு நோக்கி மானூர் வழியாக வந்து கொண்டிருக்கும்போது எதிர்பாரத விதமாக விபத்து ஏற்பட்டதில் அதில் இசக்கிபாண்டி மற்றும் அவரது மனைவி சுப்புலெட்சுமி காயமடைந்து திருநெல்வேலி மருத்துவ கல்லூரி, மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்கள்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் இரத்த கசிவு அதிகமாக ஏற்பட்டதால், மூளையின் செயல்பாடு குறித்து கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மூளை சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் உறவினர்களிடம் எடுத்துரைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, அவரது உறவினர்கள் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்ததைத்தொடர்ந்து, அவரது உடலுறுப்புகளான இதயம், கல்லீரல், இருசிறுநீரகங்கள் மற்றும் திசுக்களான கருவிழிகள், தோல் போன்ற உடல் உறுப்புகள் பெறப்பட்டு, இன்று அன்னாரது உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் மலர்வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார்கள். அன்னாரது சொந்த ஊரில் நடைபெற்ற இறுதி சடங்கில் திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா அன்னாரது உடலுக்கு மலர்வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.